10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு


10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் - சி.பி.எஸ்.இ. அறிவிப்பு
x
தினத்தந்தி 20 Nov 2020 9:24 PM GMT (Updated: 20 Nov 2020 9:27 PM GMT)

10, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.

புதுடெல்லி,

கடந்த மார்ச் மாத இறுதியில், கொரோனா தாக்கம் காரணமாக, நாடு முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டன. நடத்தப்படாமல் இருந்த தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. நடப்பு கல்வியாண்டு தொடங்கியதில் இருந்து ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

 கடந்த மாதம், சில மாநிலங்களில் உயர் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன. தமிழ்நாட்டில் கடந்த 16-ந்தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்தன. ஆனால், பெற்றோர் எதிர்ப்பு காரணமாக, பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்பட்டது.

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுகள், பிப்ரவரி, மார்ச் மாதவாக்கில் நடைபெறுவது வழக்கம். ஆனால், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது மே மாதத்துக்கு தள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் கோரிக்கைகள் எழுந்துள்ளன.

இந்தநிலையில், பொதுத்தேர்வுகள் நிச்சயம் நடைபெறும் என்று சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.இதுகுறித்து ‘புதிய கல்விக்கொள்கை-பள்ளிக்கல்வியின் பிரகாசமான எதிர்காலம்’ என்ற தலைப்பிலான இணையவழி கருத்தரங்கில், சி.பி.எஸ்.இ. செயலாளர் அனுராக் திரிபாதி பேசியதாவது:-

சி.பி.எஸ்.இ. 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நிச்சயமாக நடைபெறும். தேர்வு அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும். தேர்வை எப்படி நடத்தலாம் என்று திட்டம் வகுத்து வருகிறோம். அதை விரைவில் அறிவிப்போம். இவ்வாறு அவர் பேசினார்.

ஆனால், வழக்கம்போல் நேரடி தேர்வாக பிப்ரவரி-மார்ச் மாதம் பொதுத்தேர்வு நடக்குமா? அல்லது தள்ளி வைக்கப்படுமா? என்பது பற்றி சி.பி.எஸ்.இ. செயலாளர் எதுவும் கூறவில்லை.


Next Story