பயங்கரவாதிகளின் தாக்குதல் சதி முறியடிப்பு: பாகிஸ்தான் தூதரக அதிகாரியை இந்தியா நேரில் அழைத்து கண்டனம்


பயங்கரவாதிகளின் தாக்குதல் சதி முறியடிப்பு: பாகிஸ்தான் தூதரக அதிகாரியை இந்தியா நேரில் அழைத்து கண்டனம்
x
தினத்தந்தி 21 Nov 2020 10:28 PM GMT (Updated: 2020-11-22T03:58:05+05:30)

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதல் சதி முறியடிக்கப்பட்டது. இதையொட்டி, பாகிஸ்தான் தூதரக அதிகாரியை இந்தியா நேரில் அழைத்து கண்டித்ததுடன் தனது எதிர்ப்பை பதிவும் செய்தது.

புதுடெல்லி,

பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த செய்த சதி தொடர்பாக டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரக உயர் அதிகாரியை வெளியுறவுத்துறை அமைச்சகம் நேரில் அழைத்து கண்டித்தது. தனது எதிர்ப்பையும் முறைப்படி பதிவு செய்தது.

இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

பாகிஸ்தான் தனது மண்ணில் இருந்து செயல்படும் பயங்கரவாதிகள் மற்றும் பயங்கரவாத குழுக்களை ஆதரிக்கும் கொள்கையில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்றும், பிற நாடுகளில் தாக்குதல்கள் நடத்துவதற்காக அங்கு இயங்கி வருகிற பயங்கரவாத கட்டமைப்புகளை அகற்ற வேண்டும் என்றும் இந்தியா கூறியது.

பாகிஸ்தான் தனது கட்டுப்பாட்டில் உள்ள எந்தவொரு பகுதியையும், இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்துக்கு எந்த வகையிலும் பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என்பதில் சர்வதேச கடமைகளையும், இரு தரப்பு கடமைகளையும் நிறைவேற்ற வேண்டும். இந்தியாவின் இந்த நீண்ட கால கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தினோம்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்டத்தில் தனது தேசிய பாதுகாப்புக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், எடுக்க இந்தியா உறுதியுடன் உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story