கொரோனா பரவல் திடீர் அதிகரிப்பு: உத்தரபிரதேசம், பஞ்சாப், இமாசல பிரதேசத்துக்கு மத்திய குழுவினர் விரைந்தனர்


கொரோனா பரவல் திடீர் அதிகரிப்பு:  உத்தரபிரதேசம், பஞ்சாப், இமாசல பிரதேசத்துக்கு மத்திய குழுவினர் விரைந்தனர்
x
தினத்தந்தி 23 Nov 2020 12:21 AM GMT (Updated: 2020-11-23T05:51:52+05:30)

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று பின்னர் படிப்படியாக குறைய தொடங்கியது.

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த செப்டம்பர் மாதம் உச்சத்தில் இருந்த கொரோனா தொற்று பின்னர் படிப்படியாக குறைய தொடங்கியது. சுமார் 1 லட்சத்தை நெருங்கிய தினசரி தொற்று தற்போது 50 ஆயிரத்துக்கு கீழேயே நீடித்து வருகிறது.

அதே நேரம் ஒருசில வட மாநிலங்களில் சமீப நாட்களாக தொற்று அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது. இதனால் மத்திய பிரதேசம், குஜராத் போன்ற மாநிலங்களில் குறிப்பிட்ட சில நகரங்களில் இரவு நேர ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.

இந்த வரிசையில் உத்தரபிரதேசம், இமாசல பிரதேசம், பஞ்சாப் ஆகிய 3 மாநிலங்களிலும் தினசரி தொற்றுகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அங்கு மருத்துவமனை மற்றும் வீடுகளில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை உயர தொடங்கி உள்ளன. இது மாநில அரசுகளுக்கு அதிர்ச்சியை அளித்து இருக்கிறது.

இதைத்தொடர்ந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் இந்த மாநிலங்களுக்கு உதவுவதற்காக சிறப்பு குழுவை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது. அங்கு தொற்று அதிகரித்து வரும் மாவட்டங்களுக்கு செல்லும் இந்த குழுவினர், அங்கு பரிசோதனை அதிகரிப்பு, கண்காணிப்பு, கட்டுப்பாட்டு பகுதிகளை வலிமைப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளுக்கு உதவி புரிவார்கள்.

மேலும் தொற்று பாதித்தவர்களுக்கு உடனடி சிகிச்சை மற்றும் அடுத்த அடுத்த நடவடிக்கைகளை உறுதிப்படுத்துவதுடன், கொரோனாவை கட்டுப்படுத்த மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் செயலாற்றுவார்கள்.

ஏற்கனவே அரியானா, ராஜஸ்தான், குஜராத், மணிப்பூர் மற்றும் சத்தீஷ்கார் போன்ற மாநிலங்களுக்கும் மத்திய குழுவினர் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Story