விமான நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகளை கையாள சிறப்பு ஏற்பாடுகள்


விமான நிலையங்களில் கொரோனா தடுப்பூசிகளை கையாள சிறப்பு ஏற்பாடுகள்
x
தினத்தந்தி 23 Nov 2020 9:20 AM GMT (Updated: 2020-11-23T14:50:34+05:30)

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை சீராக கொண்டு செல்வதற்காக விமான நிலையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் தொடங்கி உள்ளன.

புதுடெல்லி, 

உலகை இன்று வரை நடுங்க வைத்து வருகிற கொரோனா வைரசை தடுப்பதற்கான தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு, அவற்றின் இறுதிக்கட்ட சோதனைகள் பல இடங்களிலும் நடந்து வருகின்றன. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து தடுப்பூசி வினியோகம் தொடங்கி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தடுப்பூசிகளை ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு சுமுகமாக கொண்டு செல்வதற்கான திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது. விமான நிலையங்களில் தடுப்பூசிகளை பாதுகாத்து வைப்பதற்கான குளிர்பதனக்கிடங்கு வசதிகள் செய்யப்படுகின்றன.

மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம், நாட்டின் மிகப்பெரிய மருந்து நுழைவாயில் ஆகும். இந்த விமான நிலையம், கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளுக்காக விமானங்கள் வந்து செல்வதற்கு நெகிழ்வான இட ஒதுக்கீட்டை (ஸ்லாட் ஒதுக்கீடு) வழங்கும் என அதன் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கத்தக்க லாரி சரக்கு ஏற்றும் இடங்கள், எக்ஸ்ரே கருவிகள் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்கும் எனவும் அவர் கூறினார்.

விமான சரக்கு ஆபரேட்டரான புளூ டார்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “எங்களிடம் மும்பை, சென்னை, ஐதராபாத், புனே, கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட 8 இடங்களில் மருந்து தர கட்டுப்பாட்டு அறைகள் உள்ளன. இந்த அறைகள் எங்கள் புளூ டார்ட் விமான நிலைய அலுவலகத்துக்கு அருகாமையில் உள்ளன. இதன் காரணமாக மருந்துகளை விரைவாக வினியோகம் செய்ய முடியும்” என தெரிவித்தார்.

மற்றொரு முன்னணி விமான சரக்கு ஆபரேட்டர் கூறும்போது, “கொரோனா தடுப்பூசிகளை திரளான மக்களுக்கு கொண்டு போய் சேர்ப்பது மிக கடுமையான முயற்சியாக அமையும். எங்கள் நிறுவனம் குறுகிய கால இடைவெளிகளில் பல விமானங்களை இயக்க தயாராக உள்ளது” என குறிப்பிட்டார்.

இதே போன்ற ஏற்பாடுகளை இண்டிகோ விமான நிறுவனம், ஐதராபாத் விமான நிலையத்தை இயக்குகிற எச்.ஐ.ஏ.எல். நிறுவனம், டெல்லி விமான நிலையத்தை இயக்குகிற டி.ஐ.ஏ.எல். நிறுவனம் போன்றவை திட்டமிட்டு வருகின்றன.

கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை மக்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்கு சம்மந்தப்பட்ட அனைவரும் போர்க்கால அடிப்படையில் செயல்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இதற்கு மத்தியில், தடுப்பூசிகளின் மருத்துவ பரிசோதனை முன்னேற்றம் குறித்து அமெரிக்க நிறுவனங்களான மாடர்னா, பைசர், இந்திய நிறுவனங்களான இந்திய சீரம் இன்ஸ்டிடியூட், பாரத்பயோடெக், ஜைடஸ் கேடிலா ஆகியவற்றுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் உள்ளது.

மேலும், கொரோனா தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான புனேயின் இந்திய சீரம் இன்ஸ்டிடியூட்டின் தலைமை செயல் அதிகாரி ஆதர் பூனவாலா, மாநாடு ஒன்றில் பேசுகையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் எங்களது கோவிஷீல்டு தடுப்பூசி சுகாதார ஊழியர்களுக்கும், முதியவர்களுக்கும் கிடைக்கும். ஏப்ரல் மாதம் பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று கூறினார்.

Next Story