ஐதராபாத் மாநகராட்சி தேர்தல்: வாக்குப்பதிவு தொடங்கியது
ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
ஐதராபாத்,
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. மாநகராட்சி தேர்தல் என்ற போதிலும் அங்கு சட்ட சபை தேர்தலுக்கு இணையாக அனல் பறக்கும் பிரசாரம் நடைபெற்றது.உள்துறை அமைச்சர் உள்பட பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலரும் ஐதராபாத் மாநகராட்சி தேர்தலுக்காக பிரசாரம் மேற்கொண்டனர். முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
150 வார்டுகளை உள்ளடக்கிய ஐதராபாத் மாநகராட்சித் தேர்தலில் மொத்தம் 74,44,260 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற உள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் மொத்த வேட்பாளர்களின் மொத்த எண்ணிக்கை 1,222. இந்த தேர்தலுக்காக தெலங்கானா மாநில தேர்தல் ஆணையம் 48,000 ஊழியர்களையும், 52,000 போலீஸாரையும் நியமித்து விரிவான தேர்தல் ஏற்பாடுகளை செய்துள்ளது.
கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கருத்தில் கொண்டு, இந்த தேர்தல் வாக்குச்சீட்டு முறையில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. சுமுகமான வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு ஏற்ப அனைத்துவிதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.
தெலங்கானா ராஷ்ட்ர சமிதி (டிஆர்எஸ்), அகில இந்திய மஜ்லீஸ் கட்சியான ஏஐஎம்ஐஎம் உடன் கூட்டணி அமைத்து இத்தேர்தலில் போட்டியிடுகிறது. இந்த கூட்டணியை எதிர்த்து, பாஜக தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தது. அதேசமயம், டிஆர்எஸ் கட்சி மாநில அமைச்சர்களையும், எம்எல்ஏக்களையும் பிரசாரத்தில் முழுமையாக ஈடுபடுத்தியது. மாநகராட்சி தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணும் பணி டிசம்பர் 4- ஆம் தேதி நடைபெற உள்ளது.
Related Tags :
Next Story