விவசாயிகள் பேரணி எதிரொலி: டெல்லி எல்லைகள் மூடப்பட்டன; போக்குவரத்துக்கு அனுமதி மறுப்பு
விவசாயிகள் பேரணி எதிரொலியாக டெல்லி எல்லைகள் மூடப்பட்டதுடன், வாகன போக்குவரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
விவசாயிகள் நலனை காக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவற்றை வாபஸ் பெற வலியுறுத்தியும் அரியானா, பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட ஆறு மாநில விவசாயிகள் டெல்லி சலோ (டெல்லி நோக்கி பேரணியாக செல்லுதல்) போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர். இன்றுடன் போராட்டம் 6வது நாளை எட்டியுள்ளது.
விவசாயிகள் போராட்டம் நடத்துவதற்கு புராரி பகுதியில், நிரான்கரி சமகம் மைதானத்தில் டெல்லி அரசு அனுமதி வழங்கி உள்ளது. எனினும், சிங்கு, சம்பு மற்றும் திக்ரி எல்லை பகுதியிலும் விவசாயிகள் திரண்டிருந்தனர்.
சீக்கிய மதகுரு குருநானக் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அமைதியான முறையில் போராட்டத்திற்கு இடையே பிரார்த்தனையில் ஈடுபட்டனர். அவர்கள் சென்ற வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.
இதேபோன்று கொரோனா பரவல் ஏற்படாமல் தவிர்க்க மருத்துவ பரிசோதனைகளுக்கான முகாம்களும் அமைக்கப்பட்டன. விவசாயிகள் பேரணியால் பிற மாநிலங்களில் இருந்து டெல்லி செல்லும் பயண போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.
போராட்ட எதிரொலியாக சிங்கு எல்லை இருபுறமும் இன்று மூடப்பட்டு உள்ளது. போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துள்ள சூழலில், சிக்னேச்சர் பிரிட்ஜ் பகுதியில் இருந்து ரோகிணி வரையிலான வெளிவட்ட சாலையை தவிர்க்கும்படியும், ஜி.டி.கே. சாலை, என்.எச். 44 மற்றும் சிங்கு எல்லையை தவிர்க்கும்படியும் டெல்லி போக்குவரத்து போலீசார் மக்களை கேட்டு கொண்டு உள்ளனர்.
இதேபோன்று திக்ரி எல்லை பகுதியும் வாகன போக்குவரத்துக்கு அனுமதி இன்றி மூடப்பட்டு உள்ளது. பதுசராய் மற்றும் ஜதிகரா எல்லைகள் இரண்டு சக்கர வாகன போக்குவரத்துக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
அரியானா செல்லும் எல்லைகளான ஜரோடா, தன்சா, தவுராலா, கபாஷேரா, ரஜோக்ரி என்.எச். 8, பிஜ்வாசன், பாலம் விகார் மற்றும் தண்டஹேரா ஆகயவை திறந்து விடப்பட்டு உள்ளன.
Related Tags :
Next Story