நாட்டிற்கு உணவு வழங்குபவர்களை ஆதரிப்பது நமது கடமை - ராகுல் காந்தி


நாட்டிற்கு உணவு வழங்குபவர்களை ஆதரிப்பது நமது கடமை - ராகுல் காந்தி
x
தினத்தந்தி 5 Dec 2020 6:56 PM IST (Updated: 5 Dec 2020 6:56 PM IST)
t-max-icont-min-icon

நாட்டிற்கு உணவு வழங்குபவர்களை ஆதரிப்பது நமது கடமை என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசின் 3  புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் கடந்த 26-ந் தேதி முதல் மிகப்பெரிய போராட்டங்களை நடத்தி வருகின்றனர். புராரி மைதானத்தில் ஒரு பிரிவினரும், மீதமுள்ளவர்கள் டெல்லி எல்லைகளிலும் திரண்டு போராடுவதால் தலைநகர் முழுவதும் ஸ்தம்பித்து வருகிறது. டெல்லியின் அனைத்து சாலைகளிலும் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

டெல்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு நாடு முழுவதும் பல்வேறு கட்சியினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இன்று தமிழகத்தில் திமுக சார்பில் விவசாயிகளுக்கு அதரவு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது;-

“பீகார் விவசாயிகள் ஏற்கனவே குறைந்தபட்ச ஆதார விலை மற்றும் விவசாய உற்பத்தி சந்தைப்படுத்தல் குழு ஆகிய விவகாரங்களால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் பிரதமர் முழு நாட்டையும் இந்த கிணற்றில் தள்ளியுள்ளார்.

விவசாய சட்டங்கள் ரத்து செய்ய வலியுறுத்தி, அவர்கள் மத்திய அரசாங்கத்தின் அடக்குமுறைகளை உறுதியாக எதிர்கொள்கின்றனர். இத்தகைய சூழ்நிலையில், நாட்டிற்கு உணவு வழங்குபவர்களை ஆதரிப்பது நமது கடமையாகும். 

இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பெண் விவசாயிகளின் ஆற்றலும் உறுதியும் இந்தியாவின் பெண்ணியத்தின் ஒரு அம்சமாகும். அவர்களின் உரிமைகளுக்கான போராட்டத்தில் இணைந்த சகோதரிகள் அனைவருக்கும் வணக்கம்!”

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Next Story