போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூத்த விவசாயிகள் வீடு திரும்ப வேண்டும்: வேளாண் துறை அமைச்சர்


போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூத்த விவசாயிகள் வீடு திரும்ப வேண்டும்: வேளாண் துறை அமைச்சர்
x
தினத்தந்தி 5 Dec 2020 8:39 PM IST (Updated: 5 Dec 2020 8:39 PM IST)
t-max-icont-min-icon

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மூத்த விவசாயிகள் வீடு திரும்ப வேண்டும் என்று வேளாண் துறை அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசு கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 'டெல்லி சலோ' போராட்டத்தை 10-வது நாளாக தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.  டெல்லி எல்லையில் திரண்டுள்ள விவசாயிகள் வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் தற்போது தீவிரமடைந்து வருகிறது. 

இதற்கிடையில், விவசாயிகளின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர மத்திய அரசு, விவசாய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது. இன்று நடைபெற்ற 5-வது கட்ட பேச்சுவார்த்தையிலும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதையடுத்து, வரும் 9 ஆம் தேதி மீண்டும் விவசாய அமைப்புகள்- மத்திய அரசு இடையே பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. 

இந்த நிலையில், பேச்சுவார்த்தைக்குப் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த வேளாண் துறை அமைச்சர் கூறுகையில், “விவசாயிகளின் அனைத்து பிரச்சனைகளையும் பேசித்தீர்க்க மத்திய அரசு தயாராக உள்ளது; தயவு கூர்ந்து மூத்த விவசாயிகள் வீடு திரும்ப வேண்டும்.  விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும், அதற்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை. 

இதை சந்தேகிப்பது ஆதாரமற்றது. , யாராவது சந்தேகப்பட்டால், அதைத் தீர்க்க அரசாங்கம் தயாராக உள்ளது.  மோடி அரசு மீது விவசாயிகள் நம்பிக்கையை தொடர வேண்டும். விவசாயிகளின் நலனுக்காகவே எதையும் செய்யும்.  கண்ணியத்துடன் நடந்து கொண்ட விவசாய அமைப்புகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைய  பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததால் வரும் 9 ஆம் தேதி அடுத்த சுற்று பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்” என்றார். 

Next Story