நாடு தழுவிய முழு கடையடைப்பு போராட்டம் :காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை அமைதியாக நடைபெறும் - விவசாய அமைப்புகள்
நாடு தழுவிய முழு கடையடைப்பு போராட்டம் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை அமைதியாக நடைபெறும். மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்காது என விவசாய அமைப்புகள் தெரிவித்து உள்ளன.
புதுடெல்லி
வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் 3 புதிய சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இது விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் என மத்திய அரசு கூறியுள்ளது.
ஆனால் இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு உள்ளிட்டவை அழிந்து, வேளாண்துறை தனியார் வசம் சிக்கிவிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். எனவே இந்த சட்டங்களை திரும்ப பெற அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். புராரி மைதானம் மற்றும் திக்ரி, சிங்கு, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் கடந்த 26-ந் தேதி முதல் விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டங்களால் டெல்லி முடங்கி உள்ளது.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் இந்த போராட்டம் இன்று 12-வது நாளாக தொடர்கிறது. நாளை விவசாயிகள் நாடு முழுவதும் முழு கடையடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து உள்ளனர்.
விவசாயிகள் போராட்டத்திற்கு திரிணாமுல் காங்கிரஸைத் தவிர அனைத்து எதிர்க்கட்சிகளும் - சிவசேனா, காங்கிரஸ், தி.மு.க, கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், ராஷ்டீரிய ஜனதா தளம், சமாஜ்வாதி கட்சி, தேசிய வாத காங்கிரஸ் ஆம் ஆத்மி கட்சி, ஜம்மு காஷ்மீரில் குப்கர் பிரகடனத்திற்கான புதிதாக உருவாக்கப்பட்ட மக்கள் கூட்டணி மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகள் ஆதரவு தெரிவித்து உள்ளன.
நாளைய முழு கடையடைப்பு போராட்டத்திற்கு தொழிற்சங்கங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் ஆதரவு அதிகரித்து வருவதால், பழங்கள் மற்றும் காய்கறிகளை வழங்குவது உள்பட சில சேவைகள் டெல்லியில் பாதிக்கப்படக்கூடும்.
இந்தியாவின் அனைத்து மோட்டார் போக்குவரத்து தொழிற்சங்கங்களும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளன. இதனால் பல மாநிலங்களில் லாரிகள் இயங்குவது பாதிக்கப்படலாம்.
ஆசியாவின் மிகப்பெரிய மொத்த சந்தையான ஆசாத்பூர் மண்டியின் தலைவர் ஆதில் அகமது கான் கூறும் போது டெல்லியில், பழங்கள் மற்றும் காய்கறிகள் குறைவாகவே இருக்கும். எங்கள் வர்த்தகர்களில் பெரும்பாலோர் முழு கடையடைப்பு அழைப்பை ஆதரிக்கின்றனர். எனவே, காசிப்பூர், ஓக்லா மற்றும் நரேலாவில் உள்ள மண்டிகள் பெரிதும் பாதிக்கப்படும்" என்று கூறினார்.
டாக்ஸி தொழிற்சங்கங்கள் பணிநிறுத்தத்தை ஆதரிக்க முடிவு செய்துள்ளதால் டெல்லி மற்றும் தமிழ்நாட்டில் உள்ள பயணிகள் சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
பல வங்கி தொழிற்சங்கங்கள் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன ஆனால் இது வங்கி சேவைகளை பாதிக்காது.
பஞ்சாபில் முழு கடையடைப்புக்கு முழு ஆதரவு தெரிவிக்கப்பட்டு உள்ளது. கர்நாடகா, மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், தெலுங்கானா மற்றும் வடகிழக்கு மாநிலங்களான திரிபுரா மற்றும் அசாமில் உள்ளிருப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. இது போக்குவரத்து நெரிசல்களை உருவாக்க வாய்ப்புள்ளது.
'அமைதியான' நாடு தழுவிய கடையடைப்பு போராட்டம் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் அவசர சேவைகள் எதுவும் பாதிக்கப்படாது என போராட்டம் நடத்தும் விவசாய அமைப்புகள் கூறி உள்ளன.
விவசாய அமைப்புகளின் செய்தித் தொடர்பாளர் ராகேஷ் டிக்கைட் கூறியதாவது:-
எங்கள் எதிர்ப்பு "அமைதியானது, அப்படியே தொடரும். வன்முறையற்ற முறையில் தங்கள் ஆதரவை வழங்குமாறு மக்களை வலியுறுத்தி உள்ளோம. அவர்களின் எதிர்ப்பு "சாமானிய மக்களுக்கு பிரச்சினைகளை ஏற்படுத்த கூடாது.
"நாளைய முழு கடையடைப்பு காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் . இது ஒரு அடையாள எதிர்ப்பு. நாங்கள் காலை 11 மணிக்குத் தொடங்குவோம், எனவே அனைவரும் சரியான நேரத்தில் அலுவலகத்தை அடைய முடியும் ... ஆம்புலன்ஸ், திருமணங்கள் போன்ற சேவைகளும் தொடரலாம். மக்கள் தங்கள் இயல்பு வாழக்கையை தொடரலாம் என கூறி உள்ளார்.
Related Tags :
Next Story