பா.ஜ.க. பேரணிகளை நடத்தி மக்களை கொல்கிறது: மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு


பா.ஜ.க. பேரணிகளை நடத்தி மக்களை கொல்கிறது:  மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 9 Dec 2020 3:52 AM IST (Updated: 9 Dec 2020 3:52 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. பேரணிகளை நடத்தி மக்களை கொல்கிறது என மேற்கு வங்காள முதல் மந்திரி மம்தா பானர்ஜி குற்றச்சாட்டாக கூறியுள்ளார்.

கொல்கத்தா,

மேற்கு வங்காளத்தில் வரும் 2021ம் ஆண்டு ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.  மேற்கு வங்காளத்தின் சிலிகுரி நகரில் பா.ஜ.க. சார்பில் மாநில தலைமை செயலகம் நோக்கி பேரணி ஒன்று நேற்று நடத்தப்பட்டது.  பா.ஜ.க.வினரை தடுத்து நிறுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தண்ணீர் பீய்ச்சியும் கூட்டத்தில் உள்ளவர்களை கலைந்து போக செய்தனர்.

இதனால், போலீசாருக்கும், தொண்டர்களுக்கும் இடையே மோதல் நடந்தது.  இதில் பேரணியில் கலந்து கொண்ட உலென் ராய் என்ற தொண்டர் உயிரிழந்து உள்ளார்.  இதற்கு மம்தாவின் திரிணாமுல் காங்சிரசாரே காரணம் என குற்றச்சாட்டு கூறியதுடன், போலீசாரை சீருடையில் இருந்த திரிணாமுல் காங்சிரசார் என்றும் பா.ஜ.க. கூறியது.  இதுபற்றி மேற்கு வங்காள ஆளுநரை பா.ஜ.க. தலைவர்கள் சந்தித்து அறிக்கை ஒன்றையும் நேற்று அளித்தனர்.

இதனை தொடர்ந்து மாநிலத்தில் 12 மணிநேர பந்திற்கு பா.ஜ.க. அழைப்பு விடுத்தது.  மேற்கு வங்காளத்தின் சிலிகுரி நகரில் பா.ஜ.க. தொண்டர் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அக்கட்சியினர் கொல்கத்தா நகரில் மெழுகுவர்த்தி ஏந்தி, நடந்து சென்று போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

இந்த சூழலில், மேற்கு வங்காளத்தின் சிலிகுரி நகரில் முதல் மந்திரி மம்தா பானர்ஜி பொது கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசினார்.  அவர் கூறும்பொழுது, பா.ஜ.க. பொய் பிரசாரத்தில் ஈடுபடுகிறது.  அது பேரணிகளை நடத்தி மக்களை கொல்கிறது என குற்றச்சாட்டாக கூறினார்.

நான் பிரேத பரிசோதனை அறிக்கையை (உயிரிழந்த பா.ஜ.க. தொண்டரின்) பார்த்தேன்.  அதில், துப்பாக்கி குண்டு காயங்களால் மரணம் ஏற்பட்டு உள்ளது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.  ஆனால், போலீசார் துப்பாக்கிகளை பயன்படுத்தவில்லை என கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசும்பொழுது, அரசுக்குரிய நிலக்கரி சுரங்கங்களை பா.ஜ.க. ஆளும் மத்திய அரசு விற்பனை செய்வதற்கு நாங்கள் அனுமதிக்கமாட்டோம் என்று உறுதிபட கூறினார்.  சட்டவிரோத (நிலக்கரி) தொழிற்சாலைகள், மத்திய மற்றும் மாநில அரசுகளால் கூட்டாக இணைந்து, சட்டப்பூர்வ தொழிற்சாலைகளாக மாற்றப்பட வேண்டும்.

இதனால் மக்கள் வேலைவாய்ப்பு பெறுவார்கள்.  இதுபற்றி மத்திய அரசிடம் ஒப்புதல் பெறுவதற்காக தகவல் தெரிவித்துள்ளேன்.  ஆனால், அரசிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை என்றும் அவர் கூட்டத்தில் பேசியுள்ளார்.

Next Story