வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 14-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்


வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் 14-வது நாளாக தொடரும் விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 9 Dec 2020 8:24 AM IST (Updated: 9 Dec 2020 8:24 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தை தொடர்ந்து 14-வது நாளாக நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் 3 புதிய சட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இது விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்தும் என மத்திய அரசு கூறியுள்ளது.

ஆனால் இந்த சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை, மண்டி அமைப்பு உள்ளிட்டவை அழிந்து, வேளாண்துறை தனியார்வசம் சிக்கிவிடும் என விவசாயிகள் அச்சம் தெரிவித்து உள்ளனர். எனவே இந்த சட்டங்களை திரும்ப பெற அவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த கோரிக்கையை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு உள்ளனர். புராரி மைதானம் மற்றும் திக்ரி, சிங்கு, காஜிப்பூர் உள்ளிட்ட எல்லைகளில் கடந்த 26-ந் தேதி முதல் விவசாயிகள் நடத்தி வரும் இந்த போராட்டங்களால் டெல்லி முடங்கி வருகிறது.

அரியானா, உத்தரபிரதேசம் போன்ற அண்டை மாநிலங்களுக்கு செல்லும் பிரதான சாலைகளை விவசாயிகள் ஆக்கிரமித்து இருப்பதால், இந்த சாலைகள் அடைக்கப்பட்டு வருகின்றன. இதனால் தலைநகர் போக்குவரத்து நெரிசலால் திணறுகிறது. இதனால் மாற்று சாலைகளை பயன்படுத்த போக்குவரத்து போலீசார் டெல்லிவாசிகளுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் இந்த போர்க்கோலம் இன்று 14-வது நாளாக கொட்டும் பனியிலும் தொடருகிறது. சுமார் 40 விவசாய அமைப்புகளை சேர்ந்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் குழுமி உள்ளனர். டெல்லியில் திறந்த வெளியில் அவர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. 

விவசாயிகளின் இந்த போராட் டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் அவர்களுடன் மத்திய அரசு தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. விவசாயிகள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடத்தி வரும் இந்த போராட்டத்துக்கு நாடு முழுவதும் ஆதரவு குவிந்து வருகிறது.

வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வலியுறுத்தி நாடு தழுவிய முழு அடைப்பு நேற்று அமைதியாக நடந்துமுடிந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story