இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை உலகம் ஒப்புக் கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை- பிரதமர் மோடி பேச்சு
இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை உலகம் ஒப்புக் கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை என புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
புதுடெல்லி
நாடாளுமன்ற கட்டிடம் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவடைய உள்ளது. இந்த கட்டித்தில் போதிய இடவசதி இல்லை. அதனால், புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போதைய கட்டிடத்தின் அருகிலேயே புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது. இதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், கட்டுமான பணிக்கு தடை விதித்தது. பூமி பூஜை நடத்தலாம்’ என்று அனுமதி அளித்தது.
அதன்படி, புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று பகல் 1 மணிக்கு நடந்தது. பிரதமர் மோடி, புதிய கட்டிடத்துக்கு அடிக்கல் நாட்டி, பூமி பூஜையை நடத்தி வைத்தார். அதற்கு பிறகு, மதியம் 1.30 மணிக்கு இந்து, முஸ்லிம், கிறிஸ்தவம், பவுத்தம், சமணம் உள்ளிட்ட அனைத்து மத முறைப்படி பிரார்த்தனைகள் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து பகல் 2.15 மணிக்கு, பிரதமர் உரையாற்றினார்.இந்த நிகழ்ச்சியில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் மற்றும் மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்ளிட்ட 200 பேர் பங்கேற்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சியில் உரையாற்றும் போது கூறியதாவது:-
2014 ஆம் ஆண்டில் எம்.பி.யாக முதன்முறையாக நாடாளுமன்ற வளாகத்திற்கு வர வாய்ப்பு கிடைத்த தருணத்தை என் வாழ்க்கையில் ஒருபோதும் மறக்க முடியாது. ஜனநாயகத்தின் இந்த கோவிலுக்குள் நுழைவதற்கு முன்பு, நான் தலை குனிந்து இந்த ஜனநாயக ஆலயத்திற்கு வணக்கம் தெரிவித்தேன்.
இந்த வரலாற்று தருணத்தை நாம் காணும்போது 130 கோடிக்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு இது பெருமை சேர்க்கும் நாள். இந்திய ஜனநாயக வரலாற்றில் இது ஒரு மிகப்பெரிய மைல் கல். பழமையும், புதுமையும் கலந்த கட்டடமாக இது இருக்கும். சுதந்திர இந்தியாவில் இது உருவாக்கப்பட உள்ளது. இது நேரம் மற்றும் தேவைகளுக்கு ஏற்ப தனக்குள்ளேயே மாற்றங்களைச் செய்வதற்கான ஒரு முயற்சி, தற்போதைய நாடாளுமன்ற கட்டிடத்தில் பொதுமக்களுக்கு சிரமம் உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிரமத்தை உணர்ந்தனர்.
கடந்த 100 ஆண்டுகளில், கட்டிடத்திற்கு கூட ஓய்வு தேவைப்படும் அளவுக்கு தற்போதைய கட்டிடத்தில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதனால்தான் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்ட முடிவு எடுக்கப்பட்டது .
புதிய நாடாளுமன்ற கட்டிடம் மக்கள் தாராளமாக வந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச சிறப்பான இடமாக அமையும். புதிய நாடாளுமன்றம் தற்சார்பு இந்தியாவை உருவாக்குவதற்கான சாட்சியாக திகழும். புதிய இந்தியாவின் புதிய அடையாளம் தான் இந்த புதிய நாடாளுமன்றம்.
இந்தியா ஜனநாயகத்தின் தாய் என்பதை உலகம் ஒப்புக் கொள்ளும் நாள் வெகு தொலைவில் இல்லை.புதிய நாடாளுமன்ற கட்டிடம் 21 ஆம் நூற்றாண்டின் இந்தியாவின் அபிலாஷைகளை வழிநடத்தும் மற்றும் பிரதிபலிக்கும்.
சென்னைக்கு அருகே உத்திரமேரூரில், மக்கள் சபை நடந்தததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது.பஞ்சாயத்து நடந்தததற்கான ஆதாரங்கள் உத்திரமேரூரில் கிடைத்துள்ளன . மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுப்பு பற்றி அதில் விரிவாக கூறப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, அங்கு மகா சபை நடந்துள்ளது. மக்களாட்சி முறை, வாழ்க்கை தத்துவமாக உள்ளது என கூறினார்.
தற்போதைய நாடாளுமன்ற கட்டிடம் 1921 ஆம் ஆண்டில் அடிக்கல் நாட்டப்பட்டு 1927 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது. ஆங்கிலயே கட்டிட வடிவமைப்பாளர்களான எட்வின் லுட்யென்ஸ், ஹெர்பெர்ட் பேகர் ஆகியோரால் உருவாக்கப்பட்ட இந்த கட்டிடத்தின் மைய மண்டபத்தின் குவி மாடம் 98 அடி விட்டம் கொண்டது.
வட்ட வடிவிலான பழைய கட்டிடம் 560 அடி விட்டம் கொண்டது. இந்த கட்டிடம் பழமையானது, கட்டிட அமைப்பு வலுவிழந்து வருவதாலும், இடபற்றாக்குறையாலும் புதிய கட்டிடம் கட்ட தீர்மானிக்கப்பட்டது. புதிய கட்டிடத்தை 971 கோடி ரூபாய் செலவில் இரண்டே ஆண்டுகளில் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
93 ஆண்டு பழைய கட்டிடத்திற்கு அருகில் முக்கோண வடிவில் 64,500 சதுர மீட்டர் பரப்பளவில் புதிய கட்டிடம் கட்டப்பட உள்ளது.6 வாயில்களை கொண்ட புதிய கட்டிடத்தில் பிரமாண்டமான முதல் நுழைவு வாயில் பொதுவானது. ஒரு வாயில் குடியரசுத் தலைவர், பிரதமருக்குமானது.
மற்றொன்று மக்களவை சபாநாயகர், மாநிலங்களவை தலைவர் மற்றும் அதிகாரிகளுக்கானது. நான்காவது வாயில் எம்.பிக்கள் மட்டுமே செல்லக்கூடியது. 5 வது மற்றும் 6 வது வாயில்கள் பொதுமக்களுக்கானது.
தரைக்கீழ் தளம், தரைத்தளம், முதல் தளம், இரண்டாம் தளம் என நான்கு தளங்களை கொண்ட இந்த கட்டிடத்தில் 888 உறுப்பினர்கள் அமரும் வகையில் 1145 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டதாக மக்களவை அமைக்கப்பட உள்ளது.
மாநிலங்களவையில் 384 இருக்கை வசதிகளும், இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடைபெறும் அரங்கில் 1,224 பேரை அமர வைப்பதற்கான வசதிகள் இடம்பெற்று இருக்கும்.
நாட்டின் ஜனநாயக பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் பிரமாண்ட அரசியல் சட்ட அரங்கம் மற்றும் நூலகம், நிலைக்குழுக்களின் அறைகள், சாப்பிடும் பகுதி, வாகன நிறுத்துமிடம் ஆகியவை இடம்பெற்று இருக்கும்.
இந்திய கலாச்சாரம், பிராந்திய கலைகள், கைவினைப் பொருட்கள் மற்றும் கட்டிடக்கலையை பிரதிபலிக்கும் வகையில் புதிய நாடாளுமன்றம் அலங்கரிக்கப்படும்.நவீன வசதிகளுடன், பலம் பொருந்திய பாதுகாப்பு அம்சங்களும், பூகம்பத்தை தாங்கும் வடிவமைப்பும் கொண்டு கட்டிடம் கட்டப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story