பா.ஜ.க. தேசிய தலைவர் கார் அணிவகுப்பு மீது தாக்குதல்; அமித்ஷா, ராஜ்நாத்சிங் கண்டனம்


பா.ஜ.க. தேசிய தலைவர் கார் அணிவகுப்பு மீது தாக்குதல்; அமித்ஷா, ராஜ்நாத்சிங் கண்டனம்
x
தினத்தந்தி 10 Dec 2020 10:15 PM IST (Updated: 10 Dec 2020 10:15 PM IST)
t-max-icont-min-icon

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கார் அணிவகுப்பு மீது நடந்த தாக்குதலுக்கு அமித்ஷா மற்றும் ராஜ்நாத்சிங் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

புதுடெல்லி,

பா.ஜ.க. தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கார் அணிவகுப்பு மீதான தாக்குதலுக்கு அமித்ஷா, ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மத்திய மந்திரிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேற்கு வங்காளத்தில் அராஜகம் பெருகி விட்டதாக அவர்கள் கூறியுள்ளனர்.

பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் கார் அணிவகுப்பு மீதான தாக்குதலை கண்டித்து, ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:–

மேற்கு வங்காளத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதையே இந்த தாக்குதல் பிரதிபலிக்கிறது. இதுபற்றி முழு விசாரணை நடத்தி, இதற்கு பொறுப்பானவர்களை அடையாளம் காட்ட வேண்டும்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:–

இந்த தூண்டிவிடப்பட்ட வன்முறை குறித்து அமைதியை விரும்பும் மாநில மக்களுக்கு மேற்கு வங்காள அரசு பதில் சொல்ல வேண்டும். திரிணாமுல் காங்கிரஸ் நிர்வாகத்தில், மேற்கு வங்காளத்தில் கொடுங்கோல், அராஜகம் அதிகரித்து விட்டது. அரசியல் வன்முறை, ஒரு தொழிலாகவே ஆகிவிட்டது கவலை அளிக்கிறது.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

வேளாண் சட்டங்கள் குறித்து பேட்டி அளித்து கொண்டிருந்த மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர், ரெயில்வே மந்திரி பியூஸ் கோயல் ஆகியோரும் இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

நரேந்திரசிங் தோமர் கூறுகையில், மேற்கு வங்காளத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்து விட்டது என்றார்.

பியூஸ் கோயல் கூறுகையில், இது ஜனநாயகம் மீதான தாக்குதல். மேற்கு வங்காளத்தில் ஜனநாயக நடைமுறைகள் நசுக்கப்படுகின்றன. தாக்குதலுக்கு காரணமான குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story