விவசாயிகளின் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம் - மத்திய அரசுக்கு சரத்பவார் எச்சரிக்கை


விவசாயிகளின் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம் - மத்திய அரசுக்கு சரத்பவார் எச்சரிக்கை
x
தினத்தந்தி 12 Dec 2020 6:52 AM IST (Updated: 12 Dec 2020 6:52 AM IST)
t-max-icont-min-icon

விவசாயிகளின் பொறுமையை சோதித்து பார்க்க வேண்டாம் என்றும், உரிய நேரத்திற்குள் முடிவு எடுக்காவிட்டால் போராட்டம் நாடு முழுவதும் பரவும் என்றும் மத்திய அரசுக்கு சரத்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மும்பை,

மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்கோரி விவசாயிகள் தொடர்ந்து 15 நாட்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. வருகிற 14-ந் தேதிக்கு பிறகு நாடு முழுவதும் போராட்டத்தை தீவிரப்படுத்த போவதாக விவசாயிகள் மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தநிலையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் வேளாண்துறை மந்திரியுமான சரத்பவார் மும்பையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வேளாண் மசோதாக்கள் மீது விரிவான விவாதம் நடத்தியபின் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றலாம் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் அவசர கதியில் நாடாளுமன்றத்தில் அவை நிறைவேற்றப்பட்டன.

தற்போது வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லி எல்லைகளில் போராடி வருகின்றனர். முதலில் வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுமாறும், அதன்பிறகு பிரச்சினைகளை பற்றி பேசலாம் என்றும் விவசாயிகள் கூறிவிட்டனர். ஆனால், மத்திய அரசு பிடிவாதமாக தனது நிலைப்பாட்டிலிருந்து மாற மறுக்கிறது. எனவே தற்போதைய நிலவரம் சாதகமாக செல்வதாக தெரியவில்லை. இந்த பிரச்சினையில் சிக்கல் மேலும் சில நாட்களுக்கு நீடிப்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

ஏறக்குறைய 700 டிராக்டர்களில் விவசாயிகள் பல்வேறு மாநிலங்களில் இருந்து புறப்பட்டு டெல்லி எல்லைக்கு இன்று(நேற்று) காலை வந்து போராட்டக்காரர்களுடன் சேர்ந்துள்ளனர். இந்தப் போராட்டம் டெல்லி எல்லையோடு தடுக்கப்படுகிறது.

விவசாயிகள் பிரச்சினைகளை தீர்க்க சரியான நேரத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் பரவுவதை தடுக்க முடியாது. இந்த நாட்டுக்கு உணவு வழங்குபவர்கள் விவசாயிகள். அவர்களின் பொறுமையை பரிசோதித்து பார்க்காதீர்கள் என்று மத்திய அரசை நாங்கள் வலியுறுத்துகிறோம்.

விவசாயிகள் போராட்டத்தின் பின்னணியில் சீனாவும், பாகிஸ்தானும் உள்ளன என்று மத்திய மந்திரி ராவ்சாகேப் தன்வே பேசியதற்கெல்லாம் முக்கியத்துவம் அளிக்க கூடாது. சிலர் எங்கிருந்து பேசுகிறோம், எப்படி பேச வேண்டும், என்ன வேண்டும் என்ற உணர்ச்சி இல்லாமல் பேசுவார்கள். இதை பெரிதாக நினைக்காதீர்கள். பலமுறை அவர் இதுபோன்று பேசியுள்ளார். காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு நான் தலைவராக வரப்போகிறேன் என சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இது உண்மைக்கு மாறான செய்தி. பொய்யான செய்திகளை பரப்பாதீர்கள்.

இவ்வாறு சரத்பவார் தெரிவித்தார்.

Next Story