நாடாளுமன்றத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீர‌ர்களுக்கு தேசம் அஞ்சலி செலுத்துகிறது - பிரதமர் மோடி


நாடாளுமன்றத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீர‌ர்களுக்கு தேசம் அஞ்சலி செலுத்துகிறது - பிரதமர் மோடி
x
தினத்தந்தி 13 Dec 2020 5:24 AM GMT (Updated: 13 Dec 2020 5:24 AM GMT)

2001 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தாக்குதலின் போது தங்கள் உயிரை தியாகம் செய்த வீர‌ர்களுக்கு தேசம் அஞ்சலி செலுத்துவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

கடந்த 2001 ஆம் ஆண்டு டெல்லியில் உள்ள இந்திய நாடாளுமன்ற வளாகத்திற்குள் பலத்த பாதுகாப்பையும் மீறி உள்ளே நுழைந்த பயங்கரவாதிகள், துப்பாக்கிகள் மற்றும் கையெறி குண்டுகள் ஆகியவற்றை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்தில் எட்டு பாதுகாப்புப் படையினர், ஒரு தோட்டக்காரர் என மொத்தம் ஒன்பது பேர் உயிரிழந்தனர். 

தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகல் 5 பேரும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட அஃப்சல் குரு கடந்த 2013 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 9-ஆம் தேதி தூக்கிலிடப்பட்டார். நாட்டின் மிக உயரிய பாதுகாப்பைக் கொண்ட நாடாளுமன்ற வளாகத்திற்குள் நடந்த இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் 19 வருடங்களுக்கு முன் இதே நாளில் நடந்த இந்த தாக்குதல் சம்பவத்தை பிரதமர் மோடி நினைவு கூர்ந்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “2001ல் நாடாளுமன்றம் மீது நடத்தப்பட்ட கோழைத்தமான தாக்குதலை இந்தியா ஒருபோதும் மறக்காது. நாடாளுமன்றத்தை பாதுகாக்க உயிர் தியாகம் செய்த வீர‌ர்களுக்கு தேசம் அஞ்சலி செலுத்துகிறது. இந்தியா அவர்களுக்கு எப்போதும் நன்றியுன் இருக்கும்” என்று பதிவிட்டுள்ளார்.

Next Story