ரெயிலில் செல்லும் போது காணாமல் போன மனைவி: 3 நாட்களாக போராடி மனைவியை மீட்ட கணவன்


ரெயிலில் செல்லும் போது காணாமல் போன மனைவி: 3 நாட்களாக போராடி மனைவியை மீட்ட கணவன்
x
தினத்தந்தி 13 Dec 2020 5:27 PM GMT (Updated: 13 Dec 2020 5:27 PM GMT)

ஒடிசாவிற்கு ரெயிலில் செல்லும்போது காணாமல் போன மனைவியை 3 நாட்களாய் போராடி கணவன் மீட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புவனேஷ்வர்,

ஒடிசா மாநிலம் பாலாசூர் பகுதியைச் சேர்ந்தவர் ரவீந்திர ஜனா (வயது 28). இவரது மனைவி கபீர் ஜனா(வயது 27). இவர்கள் இருவரும் புதுச்சேரி அருகே தனியார் கம்பெனி ஒன்றில் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்களது ஒரே மகன் ஆகாஷ் ஒடிசாவில் பாட்டியுடன் தங்கி படித்து வருகிறான். ஆண்டிற்கு ஒருமுறை இவர்கள் சென்று மகனைப் பார்த்து வருவது வழக்கம். இம்முறை கபீரை மட்டும் கடந்த 9ம் தேதி புதுச்சேரியில் இருந்து புவனேஸ்வர் செல்லும் ரெயிலில் மாலை 6.45 மணிக்கு ரவீந்திர ஜனா வழி அனுப்பிவைத்துள்ளார்.

மறுநாள் மாலை ரெயில் ஒடிசாவைச் சென்றடைந்ததும் கபீர் இல்லாததை அறிந்து உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.  இதனையடுத்து தனது மனைவியைக் காணவில்லை என புதுச்சேரி ஒதியன்சாலை காவல் நிலையத்தில் ரவீந்திர ஜனா புகார் அளித்தார். மேலும் அவரும் நேரடியாக ஒரு கார் மூலம் ஒடிசா மாநிலத்திற்குப் புறப்பட்டுச் சென்றார். வழி முழுவதும் 3 நாட்களாய் ஒவ்வொரு ரெயில் நிலையமாக மனைவியைத்
தேடி தேடி அலைந்துள்ளார். 

கடைசியில் ஒடிசா மாநிலத்திற்கு உட்பட்ட பாலேஸ்வர் என்ற பகுதியில் கபீரின் செல்போன் இணைப்பு துண்டிக்கப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து பாலேஸ்வர் ரெயில் நிலையத்தில் விசாரித்தபோது, மயங்கிய நிலையில் ஒரு பெண்ணை அங்குள்ள மருத்துவமனையில் சேர்த்ததாக ரெயில்வே அதிகாரிகள் கூறினர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனைக்கு சென்று பார்த்தபோது தனது மனைவி கபீர் தான் அங்கு இருந்தது கண்டு ஆனந்த மகிழ்ச்சி அடைந்தார். 

இதுகுறித்து அவரிடம் விசாரித்த போது, ரெயிலில் பயணித்த முதியவர் ஒருவர் வாழைப்பழம் கொடுத்ததாகவும் அதை வேண்டாம் என்று கூறியபோது தந்தையைப் போன்று இருக்கும் தன்னிடம் வாங்குமாறு கட்டாயப்படுத்தியதாகவும் இதனால் வாழைப்பழத்தை கபீர் சாப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார். 

மயக்க மருந்து கலந்து கொடுத்த அந்தப் பழத்தைச் சாப்பிட்ட சில நிமிடங்களில் கபீர் மயக்கமடைந்துள்ளார். இதனை அடுத்து அவர் அணிந்திருந்த ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்பிலான நகைகளைக் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இது குறித்து 

பாலேஸ்வர் பகுதி போலீஸ் நிலையத்தில் இந்தக் கொள்ளை தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். 

காணாமல்போன மனைவியை மூன்று நாட்களாய் அலைந்து திரிந்து கணவரே கண்டுபிடித்த சம்பவம் ஒடிசா மாநிலம் பாலேஸ்வர் மக்களை நெகிழ்ச்சி அடையச்செய்துள்ளது.


Next Story