போடாலாந்து கவுன்சில் நிர்வாகத்தை கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பா.ஜனதா கைப்பற்றுகிறது


போடாலாந்து கவுன்சில் நிர்வாகத்தை கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து பா.ஜனதா கைப்பற்றுகிறது
x
தினத்தந்தி 14 Dec 2020 2:37 AM IST (Updated: 14 Dec 2020 2:37 AM IST)
t-max-icont-min-icon

அசாம் மாநிலத்தில் உள்ள போடாலாந்து பிராந்திய கவுன்சிலுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது.

கவுகாத்தி, 

அசாம் மாநிலத்தில் உள்ள போடாலாந்து பிராந்திய கவுன்சிலுக்கு சமீபத்தில் தேர்தல் நடைபெற்றது. மத்திய அரசு ஏற்பாட்டில் கடந்த ஜனவரி மாதம் புதிய போடோ ஒப்பந்தம் கையெழுத்தானது. அதைத் தொடர்ந்து இத்தேர்தல் நடந்துள்ளது. இது, 4 மாவட்டங்களை உள்ளடக்கிய கவுன்சில் ஆகும்.

நேற்று முன்தினம் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. நேற்று முடிந்தநிலையில், முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

இதில், ஆளும் பா.ஜனதா கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்தாலும் தனித்து போட்டியிட்ட போடோ மக்கள் முன்னணி 17 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. ஐக்கிய மக்கள் லிபரல் கட்சி 12 இடங்களிலும், பா.ஜனதா 9 இடங்களிலும், காங்கிரஸ், கண சுரக்‌ஷா கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளன. எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

எனவே, கவுன்சில் நிர்வாகத்தை கூட்டாக அமைப்பதற்காக, பா.ஜனதா, ஐக்கிய மக்கள் லிபரல் கட்சி, கண சுரக்‌ஷா கட்சி ஆகியவற்றுக்கு இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் உடன்பாடு ஏற்பட்டதாக அசாம் மாநில முதல்-மந்திரி சர்பானந்தா சோனோவால் அறிவித்தார்.

கவுன்சில் நிர்வாகத்துக்கு ஐக்கிய மக்கள் லிபரல் கட்சி தலைவர் பிரமோத் போடோ தலைவராக இருப்பார் என்றும் அவர் கூறினார். அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடக்கும் அசாம் சட்டசபை தேர்தலுக்கு இத்தேர்தல் முன்னோட்டமாக கருதப்படுகிறது.


Next Story