வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு


வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாயிகள் இன்று உண்ணாவிரதம் டெல்லி எல்லையில் போலீசார் குவிப்பு
x
தினத்தந்தி 13 Dec 2020 10:06 PM GMT (Updated: 13 Dec 2020 10:06 PM GMT)

வேளாண் சட்டங்களை திரும்ப பெற கோரி விவசாய சங்க தலைவர்கள் இன்று உண்ணாவிரதம் இருக்கிறார்கள். போராட்டகளத்துக்கு தொடர்ந்து விவசாயிகள் வருவதால் டெல்லி எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.

புதுடெல்லி, 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் குறைந்தபட்ச ஆதரவு விலை போன்றவை ஒழிந்து விவசாயத்துறை பெருநிறுவனங்களின் வசமாகி விடும் என்று விவசாயிகள் அச்சம் வெளியிட்டு வருகின்றனர்.

எனவே இந்த சட்டங் களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் நேற்று 18-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்தனர். சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என டெல்லியின் எல்லை பகுதிகளில் திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளால் தலைநகர் திணறி வருகிறது.

இந்த விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்த நிலையில், வேளாண் சட்டங் கள் தொடர்பாக மத்திய அரசு வழங்கிய யோசனை களையும் விவசாயிகள் ஏற்கனவே நிராகரித்து விட்டனர்.

அத்துடன் போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் விவசாயிகள், டெல்லியை அடையும் சாலைகளை புதிதாக ஆக்கிரமிக்க திட்டமிட்டு வருகின்றனர். குறிப்பாக ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலை எண் 8-ஐ ஆக்கிரமிக்கப்போவதாக விவசாயிகள் அறிவித்திருந்தனர். அரியானாவின் குர்கான் வழியாக ஜெய்ப்பூரை அடையும் இந்த சாலை, ராஜஸ்தானில் இருந்து டெல்லியை அடையும் முக்கியமான சாலைகளில் ஒன்றாகும்.

இதைப்போல ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து மேலும் ஏராளமான விவசாயிகள் டிராக்டர் கள் போன்ற வாகனங்களில் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

எனவே டெல்லிக்கு வரும் சாலைகளில் நேற்று அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். குறிப்பாக ஜெய்ப்பூர்-டெல்லி தேசிய நெடுஞ்சாலையில் அரியானா எல்லையில் விவசாயிகள் முன்னேறுவதை தடுக்க கூடுதல் கான்கிரீட் கட்டைகளும் அடுக்கப்பட்டன. அதே நேரம் சாலையில் போக்குவரத்து தடைபடாமல் இருப்பதையும் உறுதிசெய்தனர்.

விவசாயிகள் போராட்டத்தால் ஏற்கனவே பல சாலைகள் அடைக்கப்பட்டிருக்கும் நிலையில், டெல்லிவாசிகளுக்கு தினந்தோறும் போக்குவரத்து ஒழுங்கு முறைகளை போலீசார் அறிவித்து வருகின்றனர். இது தொடர்பாக போக்குவரத்து போலீசாரின் டுவிட்டர் பக்கத்தில் தினமும் தகவல்கள் பதிவேற்றப்படுகின்றன.

இது ஒருபுறம் இருக்க டெல்லி-நொய்டா இணைப்புச்சாலையின் சில்லா எல்லை பகுதியில் முகாமிட்டிருந்த பாரதிய கிசான் யூனியன் (பானு) அமைப்பின் பிரதிநிதிகள் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங் மற்றும் நரேந்திர சிங் தோமருடன் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அந்த பகுதியில் இருந்து வெளியேறினர்.

இது குறித்து அந்த அமைப்பின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘எங்களின் கோரிக்கைகளை ராஜ்நாத்ஜி கேட்டுக்கொண்டதுடன், அவற்றை நிறைவேற்ற ஒப்புக்கொண்டார். அவரது பதிலால் திருப்தியடைந்துள்ள நாங்கள், சாலையில் இருந்து வெளியேற முடிவு செய்திருக்கிறோம். எனினும் இதன் மூலம் எங்கள் போராட்டம் முற்றுப்பெற்றதாக அர்த்தம் இல்லை’ என்று தெரிவித்தார்.

இவ்வாறு சில்லா எல்லையில் இருந்து விவசாயிகள் வெளியேறியதால் அந்த பகுதியில் நேற்று போக்குவரத்து சீரடைந்தது.

அதே நேரம் சிங்கு, திக்ரி உள்ளிட்ட பிற பகுதிகளில் நடந்து வரும் போராட்டம் பெரும் வீரியமாக தொடர்கிறது.

இதன் ஒரு பகுதியாக, விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று (திங்கட்கிழமை) உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

இது குறித்து, விவசாய அமைப்பு ஒன்றின் தலைவரான குர்னம் சிங் சதுனி நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி விவசாய அமைப்புகளின் தலைவர்கள் தாங்கள் இருக்கும் இடங்களிலேயே காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரதம் இருப்பார்கள். அதே நேரம் அனைத்து மாவட்ட தலைநகரங்களில் தர்ணா போராட்டமும் நடைபெறும். அத்துடன் டெல்லியில் நடைபெறும் போராட்டம் வழக்கம்போல நடைபெறும்’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒருசில பிரிவினர் தங்கள் போராட்டத்தை முடித்துள்ளனர். அவர்களுக்கும், எங்களுக்கும் தொடர்பில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். எங்கள் போராட்டத்தை நாசப்படுத்த அரசு சதி செய்கிறது’ என்றும் தெரிவித்தார்.

மற்றொரு தலைவரான சிவகுமார் கக்கா, 3 சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும் என்பதில் உறுதியாகவும், தெளிவாகவும் இருப்பதாகவும், போராட்டத்தில் பங்கேற்றுள்ள விவசாய அமைப்புகள் அனைத்தும் இணைந்தே இருப்பதாகவும் கூறினார்.

மேலும், வருகிற 19-ந் தேதி முதல் மேற்கொள்ள திட்டமிட்டிருந்த காலவரையற்ற உண்ணாவிரதத்துக்கு பதிலாக, ஒருநாள் உண்ணாவிரதமாக நாளை (இன்று) நடத்துவதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர்.

இந்த நிலையில் டெல்லியில் போராடி வரும் விவசாயிகளின் மனைவி, சகோதரிகள், தாய், மகள்கள் என நூற்றுக்கணக்கான பெண்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து வாகனங்கள் மூலம் டெல்லிக்கு வந்த அவர்கள், தங்கள் குடும்பத்தினருடன் போராட்டக்களத்தில் இணைந்துள்ளனர்.

இதில் சிலர் தொடர்ச்சியாக போராட்டக்களத்தில் தங்கியிருப்பதுடன், ஒரு சிலர் ஓரிரு நாட்கள் போராட்டத்தில் கலந்து விட்டு ஊர் திரும்புகின்றனர். பின்னர் அங்கு குடும்பப்பணிகளையும், தங்கள் வீட்டு ஆண்கள் மேற்கொண்டு வந்த விவசாய பணிகளையும் கவனித்து விட்டு மீண்டும் போராட்டக்களத்துக்கு திரும்பி வருகின்றனர்.

இது குறித்து சிங்கு எல்லையில் போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கும் லூதியானாவை சேர்ந்த மந்தீப் கவுர் (வயது 53) என்ற பெண் கூறுகையில், ‘விவசாயம் என்பது பாலினம் சார்ந்த தொழில் அல்ல. ஆண்களோ, பெண்களோ யார் பயிரிட்டாலும் எங்கள் வயல்கள் விளைச்சலை கொடுக்கும். ஏராளமான ஆண் விவசாயிகள் இங்கு போராடுகிறார்கள். பின்னர் நாங்கள் எப்படி வீட்டில் இருக்க முடியும்?’ என்று தெரிவித்தார்.

அவருடன் வந்திருந்த சுக்விந்தர் கவுர் (68) என்ற விதவை மூதாட்டி கூறும்போது, ‘எனது சகோதரரும், மருமகனும் பிற விவசாயிகளும் இங்கு இருக்கும்போது, என்னால் வீட்டில் இரவில் நிம்மதியாக தூங்க முடியவில்லை. இங்கு வந்தபிறகுதான் சரியாக தூங்க முடிந்தது’ என்று தெரிவித்தனர்.

75 வயதான தல்ஜிந்தர் கவுர் என்ற மூதாட்டியோ, எங்களின் உரிமைகளை பெறாமல் திரும்பமாட்டோம் எனவும், இதற்காக இந்த இடத்தில் உயிர் போனாலும் கவலையில்லை எனவும் கூறினார்.

போராட்டக்களத்தில் தங்களுக்கு எந்த வித பிரச்சினையும் இல்லை என தெரிவித்த இந்த பெண்கள், கழிவறை வசதிகள் சற்று தொலைவில் இருப்பதுதான் சிறிய குறை என கூறினர். இந்த பெண்கள், தன்னார்வ தொண்டு நிறுவனம் அமைத்துக்கொடுத்துள்ள கூடாரத்தில் இரவு தூங்குகின்றனர்.

இதற்கிடையே ராஜஸ்தானில் இருந்து டெல்லி நோக்கி பேரணியாக சென்ற விவசாயிகளை ராஜஸ்தான்-அரியானா எல்லையான ரிவாரி பகுதியில் அரியானா மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர். சாலைகளில் தடுப்பு வேலிகளை அமைத்து விவசாயிகளின் வாகனங்களை முன்னேற விடாமல் தடுத்தனர்.

எனவே விவசாயிகள் ரிவாரி எல்லை அருகே ஜெய்சிங்பூர் கேதா என்ற பகுதியில் தர்ணாவில் ஈடுபட்டு உள்ளனர். அங்கு மாநில போலீசாருடன் இணைந்து, துணை ராணுவமும் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

இவ்வாறு விவசாயிகள் போராட்டம் வீரியமாக நடந்து வரும் நிலையில், மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை, வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் நேற்று சந்தித்து பேசினார். அவருடன் வர்த்தக இணை மந்திரி சோம் பர்காசும் உடன் சென்றார்.

இந்த சந்திப்பில் பேசப்பட்ட விவகாரங்கள் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. எனினும் விவசாயிகள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் மற்றும் விவசாயிகளுடன் நடத்த வேண்டிய பேச்சுவார்த்தைகள் குறித்து ஆலோசித்ததாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன.

விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக பஞ்சாப் போலீஸ் டி.ஐ.ஜி. ராஜினாமா

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, பஞ்சாப் மாநில போலீஸ் டி.ஐ.ஜி. (சிறைத்துறை) லக்மிந்தர்சிங் ஜாக்கர், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

தனது ராஜினாமா கடிதத்தை மாநில அரசுக்கு அனுப்பி வைத்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

Next Story