விவசாயிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி குறித்து ஆலோசனை; வேளாண் மந்திரி தகவல்


விவசாயிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி குறித்து ஆலோசனை; வேளாண் மந்திரி தகவல்
x
தினத்தந்தி 14 Dec 2020 4:12 PM GMT (Updated: 14 Dec 2020 4:12 PM GMT)

விவசாயிகளுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கான தேதி குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது என வேளாண் மந்திரி தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

டெல்லியில் விவசாயிகள் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அவர்களுடன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைக்கு அரசு திட்டமிட்டு உள்ளது.

இது குறித்து மத்திய வேளாண் மந்திரி நரேந்திர சிங் தோமர் கூறுகையில், ‘அடுத்தகட்ட பேச்சுவார்த்தை நடத்துவதற்கான தேதியை இறுதி செய்வதற்காக விவசாயிகளுடன் நாங்கள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளோம். இந்த கூட்டம் நிச்சயம் நடைபெறும். விவசாயிகளுடன் எந்த நேரத்திலும் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளது. அடுத்த சந்திப்புக்கு அவர்கள் எப்போது தயார் என்பதை விவசாயிகள்தான் முடிவு செய்து தெரிவிக்க வேண்டும்’ என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறும்போது, ‘விவசாயிகளையும், விவசாய அமைப்பு தலைவர்களையும் சமசரப்படுத்த நாங்கள் முயற்சிக்கிறோம். இந்த சட்டங்களின் ஒவ்வொரு பிரிவு பிரிவாக விவாதிக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதற்கு அவர்கள் விரும்பினால், பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்’ என்று கூறினார்.

அதேநேரம் இந்த சட்டங்களை திரும்ப பெற முடியாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதையும் நரேந்திர சிங் தோமர் தெரிவித்தார்.

முன்னதாக உள்துறை மந்திரி அமித்ஷாவை இன்று காலையில் சந்தித்த தோமர், பின்னர் அனைத்திந்திய கிசான் ஒருங்கிணைப்பு கமிட்டி விவசாயிகளை சந்தித்து பேசினார். கடந்த 2 வாரங்களில், புதிய சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்த 4வது விவசாய அமைப்பு இதுவாகும்.


Next Story