போராட்டத்தால் சிரமம்: பொதுமக்களிடம் விவசாயிகள் மன்னிப்பு கேட்டனர்
எங்கள் போராட்டம் உங்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தியிருந்தால் கரம் கூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லி எல்லைகளில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்தால் பல சாலைகள் அடைக்கப்பட்டு உள்ளன. இதனால் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மிகுந்த சிரமங்களை அனுபவித்து வருகின்றனர். இந்த நிலைமையை ஏற்படுத்தியதற்காக பொதுமக்களிடம் விவசாயிகள் மன்னிப்பு கேட்டுள்ளனர்.
இது தொடர்பாக துண்டு பிரசுரங்கள் அடித்து, ஜெய்ப்பூர்-டெல்லி நெடுஞ்சாலையில் அரியானா-ராஜஸ்தான் எல்லையில் நேற்று விவசாயிகள் பொதுமக்களுக்கு வினியோகித்தனர்.
அதில், ‘சாலைகளை அடைத்து, சிரமங்களை ஏற்படுத்துவது எங்கள் நோக்கமல்ல. ஒரு கட்டாயத்தின் பேரில்தான் நாங்கள் இங்கே அமர்ந்திருக்கிறோம். எங்கள் போராட்டம் உங்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தியிருந்தால் கரம் கூப்பி மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் விவசாயிகள், ‘நாங்கள் எல்லாரும் விவசாயிகள். மக்கள் எங்களை அன்னமிடுபவர்களாக அழைக்கின்றனர். இந்த நாட்டின் பிரதமரோ புதிய சட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு வரலாற்று சிறப்புமிக்க பரிசு கொடுத்ததாக கூறுகிறார். இது பரிசு அல்ல, தண்டனை. எனவே இந்த பரிசை உங்களுடனே வைத்திருங்கள். எங்களுக்கு பரிசு தர விரும்பினால், எங்கள் விளைச்சலுக்கு நல்ல விலையை உறுதி செய்யுங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தனர்
Related Tags :
Next Story