டெல்லியில் இன்று 20-வது நாளாக தொடர்ந்து வரும் விவசாயிகளின் போராட்டம்


டெல்லியில் இன்று 20-வது நாளாக தொடர்ந்து வரும் விவசாயிகளின் போராட்டம்
x
தினத்தந்தி 15 Dec 2020 9:45 AM IST (Updated: 15 Dec 2020 9:45 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் கடும் குளிர் மற்றும் பனிக்கு இடையே தொடர்ந்து 20-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

புதுடெல்லி,

மத்திய அரசின் 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி டெல்லியை முற்றுகையிட்டுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநில விவசாயிகள் இன்று 20-வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். சிங்கு, திக்ரி, காஜிப்பூர் என டெல்லியின் எல்லை பகுதிகளில் திரண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகளால் தலைநகர் திணறி வருகிறது.

போராட்டத்தை தீவிரப்படுத்தி வரும் விவசாயிகள், டெல்லியை அடையும் சாலைகளை புதிதாக ஆக்கிரமிக்க திட்டமிட்டு வருகின்றனர். இதைப்போல ராஜஸ்தான், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இருந்து மேலும் ஏராளமான விவசாயிகள் டிராக்டர்கள் போன்ற வாகனங்களில் டெல்லியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை உண்ணாவிரத போரட்டம் மேற்கொண்டனர். மேலும் விவசாயிகளுக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று ஒருநாள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார். 

விவசாயிகள் போராட்டத்தில் நக்சலைட்டுகள் புகுந்து விட்டதாக அரசு கூறி வருவதை சுட்டுக்காட்டியுள்ள கெஜ்ரிவால், அந்த போராட்டத்திற்கு முன்னாள் ராணுவ வீரர்கள், மருத்துவர்கள், வணிகர்கள், விளையாட்டு வீரர்கள், சினிமா நட்சத்திரங்கள் ஆதரவு அளித்துள்ளதாக கூறியுள்ளார். அவர்கள் எல்லாம் நக்சலைட்டுகளா என்றும் டெல்லி முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.

3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் தமிழக விவசாயிகள் டெல்லி சென்று போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story