மேற்கு வங்காள அரசின் அதிகார வரம்புக்குள் மத்திய அரசு தலையிடுகிறது; மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு


Photo Credit:PTI
x
Photo Credit:PTI
தினத்தந்தி 15 Dec 2020 8:10 PM GMT (Updated: 2020-12-16T01:40:09+05:30)

மேற்கு வங்காள அரசின் அதிகார வரம்புக்குள் மத்திய அரசு தலையிடுவதாக முதல்-மந்திரி மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

கொல்கத்தா, 

மேற்கு வங்காளத்தில் அடுத்த ஆண்டு (2021) சட்டசபை தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பா.ஜனதா தலைவர்கள் அடிக்கடி அந்த மாநிலத்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பணிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இவ்வாறு சமீபத்தில் அங்கு சென்ற பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவின் வாகன அணிவகுப்பு மீது கற்கள் வீசப்பட்டன.

இதில் கட்சியின் பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்கியா உள்ளிட்டோரின் கார்கள் சேதமடைந்ததுடன், விஜய் வர்கியா, முகுல்ராய் போன்ற தலைவர்களுக்கு காயமும் ஏற்பட்டது. பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தின் பின்னணியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இருப்பதாக பா.ஜனதாவினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசிடம் மத்திய அரசு அறிக்கை கேட்டது. ஆனால் அதை அனுப்பாததால், மாநில தலைமை செயலாளர் மற்றும் போலீஸ் டி.ஜி.பி.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் சம்மன் அனுப்பியது. டெல்லிக்கு வந்து விளக்கம் அளிக்குமாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

ஆனால் அவர்களை டெல்லிக்கு அனுப்ப மாநில அரசு மறுத்து விட்டது. இத்தகைய சம்பவங்களால் மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே பெரும் மோதல் ஏற்பட்டு உள்ளது. இந்த விவகாரங்களில் தற்போது மத்திய அரசு மீது மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். ஜல்பாய்குரியில் நேற்று நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பேசும்போது இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

எங்கள் அதிகாரிகளுக்கு மத்திய அரசு சம்மன் அனுப்புகிறது. எங்களை அச்சுறுத்தலாம் என மத்திய அரசும், பா.ஜனதாவும் எண்ணினால், அது தவறானது.அவரையோ (ஜே.பி.நட்டா), அவரது வாகன அணிவகுப்பையோ சேதப்படுத்த வேண்டும் என யாரும் விரும்பவில்லை. அவருடன் இத்தனை கார்கள் வரவேண்டிய அவசியம் என்ன? தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள் அவருடன் ஏன் வருகின்றனர்? குண்டர்கள் இப்படி சுதந்திரமாக திரியும்போது மக்கள் கோபப்படுகிறார்கள்.

மேற்கு வங்காள அரசு அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுகிறது. குஜராத்தைப்போல மேற்கு வங்காளத்தையும் கலவர பூமியாக மாற்ற பா.ஜனதா முயற்சிக்கிறது. மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த தைரியம் உண்டா? என மத்திய அரசை கேட்கிறேன்.

பிரதமர் மோடிக்கு பா.ஜனதா எம்.பி. சுப்பிரமணியன்சாமி சமீபத்தில் எழுதிய கடிதத்தில், நாட்டின் தேசிய கீதத்தை மாற்றுமாறு கோரியிருக்கிறார். நாட்டின் வரலாற்றை மாற்ற பா.ஜனதாவினர் விரும்புகிறார்கள். அத்துடன் தற்போது தேசிய கீதத்தையும் மாற்ற எண்ணுகின்றனர். அப்படி ஒரு தவறை செய்தால், மாநில மக்கள் பா.ஜனதாவுக்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள்.

மேற்கு வங்காளத்தில் அகதி காலனிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளன. எனவே தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் குறித்து யாரும் அச்சமடைய தேவையில்லை.இவ்வாறு மம்தா பானர்ஜி கூறினார்.

Next Story