குடியரசு தினவிழா;இங்கிலாந்து பிரதமர் ஜான்சன் தலைமை விருந்தினர்- இரு தரப்பு உறவில் புதிய சகாப்தம் என இந்தியா பெருமிதம்


இங்கிலாந்து வெளியுறவு மந்திரி டொமினிக் ராப் - மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்
x
இங்கிலாந்து வெளியுறவு மந்திரி டொமினிக் ராப் - மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர்
தினத்தந்தி 16 Dec 2020 4:36 AM IST (Updated: 16 Dec 2020 4:44 AM IST)
t-max-icont-min-icon

டெல்லியில் ஜனவரி 26-ந் தேதி நடக்க உள்ள குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார்.

புதுடெல்லி, 

டெல்லியில் ஜனவரி 26-ந் தேதி நடக்க உள்ள குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமை விருந்தினராக பங்கேற்கிறார். இது இரு தரப்பு உறவில் புதிய சகாப்தம் என இந்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் பெருமிதத்துடன் கூறினார்.

இந்திய குடியரசு தின விழா, ஜனவரி மாதம் 26-ந் தேதி, தலைநகர் டெல்லியில் கோலாகலமாக நடைபெற உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் வெளிநாட்டு தலைவர் ஒருவரை அழைத்து தலைமை விருந்தினராக பங்கேற்க வைப்பது வழக்கம். அந்த வழக்கத்தின்படி, இந்த ஆண்டு குடியரசு தினவிழா கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக கலந்து கொள்ள வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த தருணத்தில் இங்கிலாந்து வெளியுறவு மந்திரி டொமினிக் ராப், இந்தியாவில் 3 நாள் சுற்றுப்பயணமாக வந்துள்ளார். அவர் மத்திய வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கரை டெல்லியில் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது. வர்த்தகம், பாதுகாப்பு, கல்வி, சுற்றுச்சூழல், சுகாதாரம் உள்ளிட்ட பல துறைகளில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் பேசினார்கள்.

அதைத் தொடர்ந்து இருவரும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.

அப்போது இந்த சந்திப்பின்போது பேசப்பட்ட விஷயங்கள் குறித்து ஜெய்சங்கர் கூறியதாவது:-

பரந்த அளவிலான பிரச்சினைகள் குறித்தும், இரு தரப்பு உறவுகளை எவ்வாறு உயர்ந்த மட்டத்துக்கு கொண்டு செல்வது என்பது பற்றியும் நாங்கள் 4 மணி நேரம் பேசினோம். சமீபத்திய ஆண்டுகளில், உலக அளவிலான அரசியலில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. நாம் ஒன்றாக இணைந்து செயல்படுவதன் மூலம், நமது நலன்கள் சிறப்பாக அமையும் என நாங்கள் நம்புகிறோம்.

ஆப்கானிஸ்தான் நிலவரம், வளைகுடா பகுதியின் முன்னேற்றங்கள், இந்தோபசிபிக் பிராந்தியத்தின் பரிணாமம் பற்றி விவாதித்தோம்.
பயங்கரவாதம், அடிப்படைவாதம் ஆகியவற்றால் முன்வைக்கப்பட்ட சவால்களும், பகிரப்படும் கவலைகள் பற்றியும் ஆலோசித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து இங்கிலாந்து வெளியுறவு மந்திரி டொமினிக் ராப் பேசினார்.

அப்போது அவர், “இங்கிலாந்து அடுத்து ஆண்டு நடத்துகிற ஜி-7 உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள வேண்டும் என்று எங்கள் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அழைத்துள்ளார். இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் இங்கிலாந்து பிரதமர் (தலைமை விருந்தினராக) கலந்து கொள்ளுமாறு தாராளமனதுடன் விடுக்கப்பட்ட அழைப்பு, மிகப்பெரிய கவுரவம் ஆகும். அதை இங்கிலாந்து பிரதமர் ஏற்றுக்கொண்டு விட்டார்” என்று கூறினார்.

அதைத் தொடர்ந்து மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, “இந்திய குடியரசு தினவிழா கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளுமாறு விடுத்த அழைப்பை போரிஸ் ஜான்சன் ஏற்றுக்கொண்டிருப்பது, இரு தரப்பு உறவில் புதிய சகாப்தத்தின் அடையாளம்” என பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

இங்கிலாந்து வெளியுறவு மந்திரி டொமினிக் ராப், நாளை (17-ந் தேதி) பெங்களூரு வருகிறார். அவர் கர்நாடக மாநில முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து பேசுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story