கர்நாடகாவில் ஒரு விநோதம் கிராமம்: 72 வருடங்களாக கிராம பஞ்சாயத்து தேர்தலை சந்திக்காத மக்கள்


கர்நாடகாவில் ஒரு விநோதம் கிராமம்: 72 வருடங்களாக கிராம பஞ்சாயத்து தேர்தலை சந்திக்காத மக்கள்
x
தினத்தந்தி 17 Dec 2020 7:48 AM IST (Updated: 17 Dec 2020 7:48 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் பெலகாவி மாவட்டம் பெல்லத பாகேவாடி கிராம மக்கள் கடந்த 72 வருடங்களாக கிராம பஞ்சாயத்து தேர்தலை சந்திக்காமல் இருந்து வருகிறார்கள்.

பெலகாவி,

பெலகாவி மாவட்டம் பெல்லத பாகேவாடி கிராம மக்கள் கடந்த 72 வருடங்களாக கிராம பஞ்சாயத்து தேர்தலை சந்திக்காமல் இருந்து வருகிறார்கள். அந்த கிராமத்தில் மக்கள் பிரதிநிதிகள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்.

கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் தொடர்பாக கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்து வந்தது. அந்த வழக்கு முடிந்து தற்போது மாநிலத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் தயாராகி விட்டது. மாநிலத்தில் வருகிற 22 மற்றும் 27-ந் தேதிகளில் 2 கட்டங்களாக கிராம பஞ்சாயத்து தேர்தல் நடைபெற உள்ளன.

இதில் முதல்கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் முடிந்துவிட்டது. வாக்குப்பதிவுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. இந்த நிலையில் கடந்த 72 வருடங்களாக கிராம பஞ்சாயத்து தேர்தலே நடக்காமல் இருந்த ஒரு கிராமத்தில் தற்போது ஒருமனதாக 33 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள சம்பவம் நடந்துள்ளது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

பெலகாவி (மாவட்டம்) உக்கேரி தாலுகாவிற்கு உட்பட்டது பெல்லத பாகேவாடி கிராமம். பெலகாவியில் பலம் வாய்ந்தவர்களாக கருதப்படும் கட்டி(உமேஷ் கட்டி மற்றும் ரமேஷ் கட்டி) சகோதரர்கள் ஒவ்வொரு கிராமங்களின் பிரதிநிதிகளுடன் சேர்ந்து கொண்டு கிராம பஞ்சாயத்து தேர்தலை நடத்தாமல் இருந்து வந்தனர். மேலும் அவர்கள் கிராமங்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை செய்து வந்தனர். அதேபோல் பெல்லத பாகேவாடி கிராமத்திலும் கிராம பஞ்சாயத்து தேர்தல் நடத்தப்படாமல் இருந்து வந்தது.

இதனால் ஒவ்வொரு முறையும் பெல்லத பாகேவாடி கிராமத்தில் கிராம பஞ்சாயத்து தலைவர், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு வந்தனர். இதனால் கடந்த 72 வருடங்களாக இந்த கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கிராம பஞ்சாயத்து தேர்தலை சந்தித்தது இல்லை. கடந்த 1977-ம் ஆண்டு இந்த கிராமத்தில் ஒரேயொரு வார்டுக்கு மட்டும் தேர்தல் நடைபெற்றது. அதன்பிறகு தற்போது வரை கிராம பஞ்சாயத்து தேர்தல் நடைபெறவில்லை.

அதேபோல் இந்த முறையும் பெல்லத பாகேவாடி கிராமத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் நடைபெறப்போவது இல்லை என்று தெரிகிறது. ஏனெனில் அந்த கிராமத்தில் உள்ள 9 வார்டுகளுக்கும் 33 உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டு விட்டனர். அவர்கள் 33 பேரையும் நேற்று ரமேஷ் கட்டி தனது வீட்டிற்கு வரவழைத்து நல்ல முறையில் மக்களுக்கு சேவையாற்றும்படி வாழ்த்தினார்.

தற்போது அவர்கள் 33 பேரையும் ரமேஷ் கட்டி தனது வீட்டிற்கு வரவழைத்து வாழ்த்து தெரிவித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளன. அது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த புகைப்படங்களை பார்த்த பலரும் தேர்தல் நடத்தப்படுவதற்கு முன்பே வார்டு உறுப்பினர்களின் பதவிகளை இப்படி விலைபேசி விற்பது சரியல்ல என்று கருத்து தெரிவித்துள்ளனர்.


Next Story