இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக சரிகிறது: 24 ஆயிரம் பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று


இந்தியாவில் கொரோனா பாதிப்பு வேகமாக சரிகிறது: 24 ஆயிரம் பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று
x
தினத்தந்தி 17 Dec 2020 11:09 AM IST (Updated: 17 Dec 2020 11:09 AM IST)
t-max-icont-min-icon

இந்தியாவில் புதிதாக 24,010 பேர் மட்டுமே கொரோனாவிடம் சிக்கியிருக்கும் நிலையில், நாடு முழுவதும் பாதிப்பு வேகமாக சரிந்து வருகிறது.

புதுடெல்லி, 

இந்தியாவில் கடந்த ஜனவரி மாத இறுதியில் முதல் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், பின்னர் அது படிப்படியாக அதிகரித்தது. கடந்த செப்டம்பர் மாதத்தில் உச்சத்தை அடைந்தது. நாள்தோறும் சுமார் 1 லட்சம் நோயாளிகள் என்ற நிலையை அப்போது எட்டியது.

பின்னர் தொற்றின் வேகம் படிப்படியாக சரியத்தொடங்கியது. சமீப நாட்களாக 30 ஆயிரத்துக்கு மேல் தினசரி பாதிப்பு கண்டறியப்பட்டு வந்தது. தற்போது அதில் இருந்தும் குறைந்துள்ளது. இவ்வாறு பாதிப்பு எண்ணிக்கை வேகமாக சரிவதால் மத்திய-மாநில அரசுகளுக்கு மகிழ்ச்சியையும், மருத்துவத்துறைக்கு ஆறுதலையும் அளித்து இருக்கிறது.

இந்த வரிசையில் இன்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும்  புதிதாக பாதிக்கப்பட்ட 24,010 பேரையும் சேர்த்து, இந்தியாவில் இதுவரை 99 லட்சத்து 56 ஆயிரத்து 558 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் 355 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இதனால் இந்தியாவின் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 44 ஆயிரத்து 451ஆக உயர்ந்து விட்டது.

இந்தியாவில் 99 லட்சத்துக்கு மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ள நிலையில், அந்தவகையில் மொத்தம் 94 லட்சத்து 89 ஆயிரத்து 740 பேர் இதுவரை தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதில் இன்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் குணமடைந்த 33 ஆயிரத்து 291 பேரும் அடங்குவர்.

இவ்வாறு அதிகமான எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் குணமடைந்திருப்பதால், ஆஸ்பத்திரிகளில் சிகிச்சையில் இருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக சரிந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி வெறும் 3 லட்சத்து 22 ஆயிரத்து 366 பேர் மட்டுமே சிகிச்சையில் இருந்தனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தகவல்படி டிசம்பா் 16-ஆம் தேதி வரை 15,78,05,240 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் புதன்கிழமை மட்டும் 11,58,960 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன.

Next Story