“வெளிப்படைத்தன்மை இருக்கட்டும், வணக்கம்” - பி.எம்.கேர்ஸ் நிதி குறித்து ராகுல் காந்தி ட்வீட்


“வெளிப்படைத்தன்மை இருக்கட்டும், வணக்கம்” - பி.எம்.கேர்ஸ் நிதி குறித்து ராகுல் காந்தி ட்வீட்
x
தினத்தந்தி 17 Dec 2020 6:14 PM GMT (Updated: 17 Dec 2020 6:14 PM GMT)

பி.எம்.கேர்ஸ் நிதி குறித்து ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், “வெளிப்படைத்தன்மை இருக்கட்டும், வணக்கம்” என்று பதிவிட்டுள்ளார்.

புதுடெல்லி,

கொரோனா பேரிடர் காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ‘பி.எம்.கேர்ஸ்’ என்ற பெயரில் பொதுமக்களிடம் இருந்து நன்கொடை பெறப்பட்டு வருகிறது. இதன் மூலம் பெறப்பட்ட நன்கொடை தொடர்பாக அவ்வபோது சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. இதில் வெளிப்படைத் தன்மை இல்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியின் செய்தித்தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நேற்று டுவிட்டரில் பதிவிட்ட கருத்தில், “வெளிநாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் மூலம் ‘பி.எம்.கேர்ஸ்’ நிதிக்கு நன்கொடை வாங்கப்படுகிறது. அதிலும் சீனா, பாகிஸ்தான், கத்தார் நாடுகளில் இருந்து பி.எம்.கேர்ஸ் நிதிக்கு நன்கொடை வாங்குவது புதிராக இருக்கிறது” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் பி.எம்.கேர்ஸ் நிதி தொடர்பாக வெளிவந்த செய்தி ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “பி.எம்.கேர்ஸ் தனியார் அறக்கட்டளையா அல்லது அரசின் அறக்கட்டளையா என்பது தெளிவாகக் கூறப்படவில்லை. அரசு நிறுவனங்கள் மூலமாக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து நிதி பெறப்படுகிறது. ஆனால் ஆவணங்களில் பெறப்படும் நிதி தனியார் நிதி எனத் தெரிவிக்கப்பட்டு ஆர்.டி.ஐ. விலக்குபெற்றுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது. இந்த செய்தியை பகிர்ந்துள்ள ராகுல் காந்தி, “பி.எம்.கேர்ஸ் - வெளிப்படைத்தன்மை இருக்கட்டும், வணக்கம்” என்றும் பதிவிட்டுள்ளார். 

Next Story