5 மாநில சட்டசபை தேர்தல் ஆயத்தப்பணி தொடங்கியது
தமிழ்நாடு உள்பட 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கியது.
புதுடெல்லி,
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், அசாம், கேரளா, புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை பதவிக்காலம், அடுத்த ஆண்டு மே, ஜூன் மாதவாக்கில் முடிவடைகிறது. எனவே, மேற்கண்ட 5 மாநிலங்களில் ஏப்ரல், மே மாதவாக்கில் சட்டசபை தேர்தல் நடத்தப்பட வேண்டி உள்ளது.
இந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கான ஆயத்த பணிகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது. அதன்படி, தேர்தல் கமிஷன் துணை கமிஷனர் சுதீப் ஜெயின் நேற்று முன்தினம் இரவு மேற்கு வங்காளத்துக்கு சென்றார். நேற்று அவர் மாவட்ட கலெக்டர்களுடன் தேர்தலுக்கான தயாரிப்புகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
2 நாட்கள் அவர் கொல்கத்தாவிலேயே தங்கி இருப்பார். சட்டசபை தேர்தல் ஆயத்த பணிகள் பற்றி அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். தேர்தலின்போது கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துவது குறித்து சுகாதார அதிகாரிகளுடன் விவாதிக்கிறார். அதுபோல், தேர்தல் கமிஷன் செயலாளர் உமேஷ் சின்கா, அடுத்த வாரம் தமிழ்நாட்டுக்கு வருகிறார். தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்.
தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களிலும் கடும் அரசியல் மோதல் நடந்து வருகிறது. வழக்கமாக, தமிழ்நாட்டில் அ.தி.மு.க.-தி.மு.க. இடையே நேரடி போட்டியாக சட்டசபை தேர்தல் நடக்கும். நடிகர் ரஜினிகாந்த், அரசியல் கட்சி தொடங்கி, இந்த தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளது, கவனத்தை ஈர்த்துள்ளது.
மேற்கு வங்காளத்தில், 10 ஆண்டுகாலம் ஆட்சி நடத்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, பா.ஜனதாவால் கடும் சவாலை எதிர்நோக்கி உள்ளது. அசாம் மாநிலத்தில் பா.ஜனதா-காங்கிரஸ் இடையே நேரடிப்போட்டி நிலவுகிறது. கேரளாவில், ஆளும் கம்யூனிஸ்டு கூட்டணிக்கும், காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடிப்போட்டி நிலவுகிறது.
Related Tags :
Next Story