அயோத்தியில் பிரமாண்ட மசூதிக்கு அடுத்த மாதம் அடிக்கல் - ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பேர் தொழுகை நடத்தலாம்


அயோத்தியில் பிரமாண்ட மசூதிக்கு அடுத்த மாதம் அடிக்கல் - ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பேர் தொழுகை நடத்தலாம்
x
தினத்தந்தி 18 Dec 2020 12:28 AM GMT (Updated: 2020-12-18T05:58:29+05:30)

அயோத்தியில் ஒரே நேரத்தில் 2 ஆயிரம்பேர் தொழுகை நடத்தும் அளவில் பிரமாண்ட மசூதி கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல், அடுத்த மாதம் 26-ந்தேதி நாட்டப்படுகிறது.

அயோத்தி,

அயோத்தியில் பாபர் மசூதி அமைந்திருந்த நிலம் யாருக்கு சொந்தமானது என்பது குறித்த அப்பீல் வழக்கை சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து கடந்த ஆண்டு, நவம்பர் மாதம் 9-ந்தேதி தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பில், அயோத்தியில் சர்ச்சைக்குரியதாக கருதப்பட்ட 2.77 ஏக்கர் நிலத்தை ராம் லல்லாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு வழங்கி உத்தரவிட்டது. அத்துடன் முஸ்லிம்களுக்கு மசூதி கட்டிக்கொள்வதற்கு 5 ஏக்கர் மாற்று இடம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

அதன்படி, தான்னிப்பூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் புதிய மசூதி கட்டுவதற்காக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தில், உத்தரபிரதேச மாநில சன்னி வக்பு வாரியம் அமைத்துள்ள அறக்கட்டளை புதிய மசூதியை கட்ட இருக்கிறது. புதிய மசூதிக்கு அடுத்த மாதம் 26-ந் தேதி அடிக்கல் நாட்ட உள்ளனர். புதிய மசூதி கட்டுவதற்காக உத்தரபிரதேச மாநில சன்னி வக்பு வாரியம் இந்தோ இஸ்லாமிய கலாசார அறக்கட்டளையை நிறுவி 6 மாதங்களான நிலையில், புதிய மசூதிக்கு அடிக்கல் நாட்டப்படுகிறது.

இதை அறக்கட்டளையின் செயலாளர் அதார் உசேன் நேற்று தெரிவித்தார். நாளை (சனிக்கிழமை) புதிய மசூதி, பன்முக சிறப்பு ஆஸ்பத்திரி, சமூக சமையல்கூடம், நூலகம் உள்ளிட்டவற்றுக்கான வரைபடங்கள் வெளியிடப்படுகின்றன. இந்த வரைபடங்களை தலைமை கட்டிட கலைஞர் எஸ்.எம். அக்தர் இறுதி செய்துள்ளார்.

புதிய மசூதி வட்ட வடிவத்தில் அமைந்திருக்கும். அது, ஒரே நேரத்தில் 2 ஆயிரம் பேர் அமர்ந்து தொழுகை நடத்தத்தக்க அளவில் பிரமாண்டமாக அமையும். இந்த மசூதி ஏற்கனவே இருந்த பாபர் மசூதியை விட பெரிய அளவில் இருக்கும். ஆனால் அதே போன்ற கட்டமைப்பை கொண்டிருக்காது. சூரிய மின்சக்தி வசதியையும், இயற்கை வெப்ப நிலை பராமரிப்பு முறையையும் கொண்டதாக புதிய மசூதி அமையும்.

பன்முக சிறப்பு ஆஸ்பத்திரியுடன் நர்சிங் கல்லூரியும், மருத்துவ சார்பு கல்லூரியும் அமைக்கப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. அயோத்தியில் ராமர்கோவில் கட்டுவதற்கு கடந்த ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியது நினைவுகூரத்தக்கது.

Next Story