இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் கேரளா - 6 ஆயிரம் பேருக்கு தொற்று
இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பில் முதலிடத்தில் கேரள மாநிலம் உள்ளது. அங்கு 24 மணி நேரத்தில் 6 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு தொற்று ஏற்பட்டு உள்ளது.
புதுடெல்லி,
பல்வேறு நாடுகளை கொரோனா தொற்று இன்னமும் வாட்டி வரும் நிலையில், இந்தியாவில் கொரோனாவின் வீரியம் தணிந்து வருகிறது. இங்கு புதிய பாதிப்புகள் கணிசமாக குறைந்து உள்ளன. நாடு முழுவதும் ஒட்டுமொத்த அளவில் கொரோனா தொற்று வேகமாக சரிந்து வரும் அதேவேளையில், ஓரிரு மாநிலங்களில் இன்னமும் தொற்றின் கோரம் நீடிக்கத்தான் செய்கிறது. இந்த பட்டியலில் கேரள மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது.
கேரளாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 6,185 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அடுத்ததாக மேற்கு வங்காள மாநிலம் 2,293 புதிய பாதிப்புகளையும், சத்தீஸ்கார் 1,661 தொற்றுகளையும் பெற்றிருக்கின்றன. இவ்வாறு அதிக பாதிப்புகளை பெற்றுள்ள கேரளாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை முடுக்கி விட்டு உள்ளன.
மேற்படி 3 மாநிலங்கள் பெற்ற பாதிப்புகள் உள்பட நாடு முழுவதும் மேற்படி 24 மணி நேரத்தில் 24 ஆயிரத்து 10 பேர் கொரோனாவிடம் சிக்கி இருக்கின்றனர். இதில் 78.27 சதவீதம் பேர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இந்த 24,010 பேரையும் சேர்த்து, இந்தியா இதுவரை 99 லட்சத்து 56 ஆயிரத்து 557 கொரோனா பாதிப்பை பெற்றிருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க நேற்று காலை 8 மணி வரையிலான ஒரு நாளில் மட்டும் 355 பேர் கொரோனாவால் மரணத்தை தழுவி இருக்கின்றனர். இது மொத்த சாவு எண்ணிக்கையை 1 லட்சத்து 44 ஆயிரத்து 451 ஆக உயர்த்தி இருக்கிறது. அதேநேரம் மேற்படி 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 33 ஆயிரத்து 291 பேர் குணமடைந்திருக்கின்றனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 94 லட்சத்து 89 ஆயிரத்து 740 ஆக உயர்ந்திருக்கிறது.
புதிதாக குணமடைந்தவர்களில் 75.63 சதவீதத்தினர் 10 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களை சேர்ந்தவர்கள் ஆவர். இதிலும் அதிகபட்சமாக 5,728 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் ஆவர். தொடர்ந்து மராட்டியர்கள் 3,887 பேரும், மேற்கு வங்காளத்தினர் 2,767 பேரும் ஒரே நாளில் மீண்டுள்ளனர்.
இந்தியாவில் தினமும் புதிதாக பாதிக்கப்படுபவர்களை விட குணமடைந்து வீடு திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் மொத்த நோயாளிகளின் எண்ணிக்கையும் சரிந்து வருகிறது. நேற்று காலை நிலவரப்படி வெறும் 3 லட்சத்து 22 ஆயிரத்து 366 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர். இவ்வாறு 4 லட்சத்துக்கு குறைவான நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து 11 நாட்களாக நீடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் கொரோனா பாதிப்பை பொறுத்தவரை மொத்த நோயாளிகளில் 95.31 சதவீதத்தினர் மீண்டு விட்டனர். 3.24 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர். 1.45 சதவீதத்தினர் மரணத்தை தழுவி உள்ளனர். உலக அளவில் அதிக குணமடைதல் விகிதத்தை கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். குணமடைதலை பொறுத்தவரை உலக சராசரி 70.27 ஆகும். அதை விட அதிக சராசரியை இந்தியா கொண்டுள்ளது. இதில் அமெரிக்கா, பிரேசில், ரஷியா மற்றும் இத்தாலி கூட குறைவான சராசரியை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் குணமடைதல் விழுக்காடு அதிகரிப்பும், உயிரிழப்பு சதவீதம் குறைவதும் கொரோனாவுக்கு எதிரான போரின் மிகச்சிறந்த செயல்பாடு ஆகும். இது உலக அளவில் கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவை முன்னணியில் வைத்திருக்கிறது.
இதற்கிடையே நேற்றுமுன்தினம் மேலும் 11 லட்சத்து 58 ஆயிரத்து 960 சளி மாதிரிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. இதனால் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைகளின் எண்ணிக்கை 15.78 கோடியாக அதிகரித்து உள்ளது. இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
Related Tags :
Next Story