வேளாண் சட்டங்களை திரும்பபெறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் - விவசாயிகள் அறிவிப்பு


வேளாண் சட்டங்களை திரும்பபெறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் - விவசாயிகள் அறிவிப்பு
x
தினத்தந்தி 18 Dec 2020 12:00 PM IST (Updated: 18 Dec 2020 12:00 PM IST)
t-max-icont-min-icon

வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பபெறும் வரை போராட்டத்தை கைவிடமாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

புதுடெல்லி,

வேளாண் துறையை சீர்திருத்தும் நோக்கில் 3 புதிய சட்டங்களை நிறைவேற்றிய மத்திய அரசு, இவை விவசாயிகளின் நலனை பாதுகாக்கும் என கூறி வருகிறது.

ஆனால் இந்த சட்டங் களால் குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் மண்டி (சந்தை) அமைப்பு உள்ளிட்டவை ஒழிந்து, வேளாண் துறை பெருநிறுவனங்களின் வசமாகி விடும் என விவசாயிகள் அச்சம் வெளியிட்டு உள்ளனர். எனவே இந்த சட்டங்களை திரும்பப்பெறக்கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

குறிப்பாக பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் டெல்லியில் போர்க்கோலம் பூண்டுள்ளனர். தலைநகரின் எல்லைகளை ஆக்கிரமித்து அவர்கள் நடத்தி வரும் போராட்டம் இன்று 23-வது நாளை எட்டியது.

இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்தன. எனவே போராட்டம் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இதனால் டெல்லிவாசிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.

டெல்லியில் 23-வது நாளாக போராடி வரும் விவசாயிகள், பிரதமர் விவசாயிகளுடன் பேச வேண்டும்  மற்றும் மத்திய அரசு வேளாண் சட்டங்களை திரும்பபெறும் வரை எங்களது போராட்டத்தை நாங்கள் கைவிடமாட்டோம் என திட்டவட்டமாக அறிவித்துள்ளனர்.

மேலும் வேளாண் சட்டங்களுக்கு எதிரான எங்கள் போராட்டம் தொடரும் என்பதால் நாங்கள் நீண்ட காலம் தங்குவதற்கு நாங்கள் தயாராகி வருகிறோம். இது குளிர்காலம் என்பதால்  நாங்கள் அதிக கூடாரங்களை தயார் செய்து வருகிறோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயி ஒருவர் கூறினார்.


Next Story