மேற்குவங்கத்தில் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா: மூத்த தலைவர்களுடன் மம்தா பானர்ஜி ஆலோசனை


மேற்குவங்கத்தில் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா: மூத்த தலைவர்களுடன் மம்தா பானர்ஜி ஆலோசனை
x
தினத்தந்தி 18 Dec 2020 9:01 AM GMT (Updated: 18 Dec 2020 9:01 AM GMT)

மேற்குவங்கத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்ததையடுத்து கட்சியின் மூத்த தலைவர்களுடன் மம்தா பானர்ஜி ஆலோசனை நடத்த உள்ளார்.

கொல்கத்தா,

மேற்குவங்கத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மேற்கு வங்காளத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. திரிணமுல் காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன.

இந்தநிலையில் கடந்த இரு தினங்களில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியிலிருந்து 3 எம்.எல்.ஏ.க்கள் பதவி விலகி உள்ளது மம்தா அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

பந்தபேஷ்வர் தொகுதி எம்.எல்.ஏ ஜிதேந்திர திவாரி, முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சரும், தற்போதைய எம்.எல்.ஏவுமான சுவேந்து அதிகாரி, இன்று பாராக்பூர் எம்எல்ஏ ஷில்பத்ரா தத்தா என கடந்த இரு தினங்களில் மூன்று பேர் கட்சியிலிருந்து விலகி உள்ளனர். இவர்கள் பாஜகவில் இணைய உள்ளதாக தகவலகள் வெளியாகியுள்ளன.

இந்த சூழ்நிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக் கூட்டம் இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது. மம்தா பானர்ஜி, கட்சியின் மூத்தத் தலைவர்களுடன் இதுகுறித்து ஆலோசனை செய்யப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது கட்சியின் அவசர கூட்டம் இல்லை. இன்றைய சந்திப்பு வழக்கமான கூட்டங்களின் ஒரு பகுதியாகும். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும், தலைவர், கட்சியின் நிர்வாகிகளை சந்திப்பது வழக்கம் ஆகும் என அக்கட்சியின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Next Story