மத்திய அரசுதான் தீர்வு காண வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு அல்ல; விவசாய அமைப்பு உறுதி
வேளாண் சட்ட விவகாரத்தில் மத்திய அரசுதான் தீர்வு காண வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு அல்ல என்று விவசாய அமைப்பு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, இந்த பிரச்சினையில் கோர்ட்டு தலையிடாது எனவும், விவசாயிகள் போராடுவதற்கு அடிப்படை உரிமை உண்டு எனவும் கூறியது. முன்னதாக இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர குழு ஒன்று அமைக்கவும் பரிந்துரைத்து இருந்தது.
இந்தநிலையில் தங்கள் பிரச்சினையை அரசுதான் தீர்க்க வேண்டும் என அனைத்து இந்திய கிசான் சபா என்ற விவசாய அமைப்பு ஒன்று தெரிவித்து உள்ளது. டெல்லியில் போராடி வரும் இந்த அமைப்பின் மூத்த தலைவரான கிருஷ்ணபிரசாத் கூறுகையில், ‘வேளாண் சட்டங்கள் தொடர்பான விவசாயிகள் பிரச்சினையை தீர்க்க வேண்டியது மத்திய அரசுதானே தவிர, சுப்ரீம் கோர்ட்டு அல்ல.
கோர்ட்டு உத்தரவும் அதைத்தான் கூறியிருக்கிறது. இந்த விவகாரத்தில் நாங்கள் கோர்ட்டை அணுகவில்லை. ஏனெனில் அரசின் ஒரு கொள்கைக்கு எதிராகவே விவசாயிகள் போராடி வருகின்றனர். நிர்வாகம்தான் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்ற புரிதல் எங்களுக்கு உண்டு’ என்று தெரிவித்தார்.
Related Tags :
Next Story