கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அதிகாரிகளுடன், முதல்-மந்திரி எடியூரப்பா இன்று ஆலோசனை


கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அதிகாரிகளுடன், முதல்-மந்திரி எடியூரப்பா இன்று ஆலோசனை
x
தினத்தந்தி 19 Dec 2020 4:11 AM IST (Updated: 19 Dec 2020 4:11 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அதிகாரிகளுடன், முதல்-மந்திரி எடியூரப்பா இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் உள்ளது. கல்லூரிகள் மட்டும் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் மாநிலத்தில கொரோனா பரவல் குறைந்து வருவதால் பள்ளிகளை திறக்க நிபுணர்கள் குழுவினர் அரசுக்கு சில பரிந்துரைகளை வழங்கி உள்ளனர். அதன்படி கர்நாடகத்தில் அடுத்த மாதம்(ஜனவரி) 1-ந் தேதிக்கு பின்பு பள்ளிகளை திறக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுபற்றி முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் ஆலோசனை நடத்தி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை மந்திரி சுரேஷ் குமார் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் கர்நாடகத்தில் பள்ளிகளை திறப்பது தொடர்பாக இன்று (சனிக்கிழமை) முதல்-மந்திரி எடியூரப்பா தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை மந்திரி சுரேஷ் குமார், சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் மற்றும் கல்வித்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

கிருஷ்ணா இல்லத்தில் மதியம் 12.30 மணியளவில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாநிலத்தில் பள்ளிகளை எப்போது திறக்கலாம், அதற்காக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டு முடிவு எடுக்கப்பட உள்ளது. அதேநேரத்தில் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Next Story