அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம்: சிவசேனா ரூ.1 கோடி கொடுத்தது


அயோத்தி ராமர் கோவில் கட்டுமானம்: சிவசேனா ரூ.1 கோடி கொடுத்தது
x
தினத்தந்தி 19 Dec 2020 6:32 AM IST (Updated: 19 Dec 2020 6:32 AM IST)
t-max-icont-min-icon

அயோத்தியில் அமையும் ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கு சிவசேனா கட்சி ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளது. உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் ரூ.11 லட்சம் கொடுத்தார்.

லக்னோ, 

அயோத்தி ராம ஜென்மபூமி அறக்கட்டளை பொதுச் செயலாளர் சம்பத்ராய் லக்னோவில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“அயோத்தியில் ராமர் பிறந்த இடத்தில் பிரமாண்ட கோவில் கட்டும் பணிக்காக நிதி திரட்டும் ஸ்ரீராம் மந்திர் நிதி சம்பாரன் நிகழ்வு, வருகிற ஜனவரி 15-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 27-ந்தேதி வரை நாடு முழுவதும் நடைபெறும். இதற்காக நாடெங்கும் உள்ள ராம பக்தர்களின் ஆதரவை நாங்கள் கோருகிறோம். விஸ்வ இந்து பரிஷத் தொண்டர்கள், வணக்கத்துக்குரிய ஜீயர்கள் உள்ளிட்டோருடன் வீடுவீடாக சென்று நன்கொடை பெறுவார்கள். தற்போது அயோத்தியில் ராமர் கோவில் கட்டுமானப் பணிக்கு சிவசேனா கட்சி ரூ.1 கோடி வழங்கியுள்ளது. உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தனது சொந்தப் பணத்தில் ரூ.11 லட்சம் கொடுத்துள்ளார்” என்றார்.

அதற்கு முன்பு டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சம்பத்ராய் கூறுகையில், “வெளிநாட்டில் இருந்துவரும் நன்கொடையைப் பெற உரிய அனுமதி கிடைக்காததால், உள்நாட்டில் பொதுமக்களிடம் இருந்து திரட்டப்படும் நன்கொடையைக் கொண்டே ராமர் கோவில் கட்டப்படும். நன்கொடை திரட்டும் நிகழ்வின்போது, புதிய கோவிலின் மாதிரி படம் கோடிக்கணக்கான வீடுகளுக்கு வழங்கப்படும்.

நிதி திரட்டும் நிகழ்வின் மூலம், ராம ஜென்மபூமி இயக்கத்தின் வரலாற்று முக்கியத்துவம் நாட்டு மக்களுக்கு உணர்த்தப்படும். ரூ.10, ரூ.100, ரூ.1,000 மதிப்பில் நன்கொடை ரசீதுகள் கிடைக்கும். நிதிப் பரிமாற்றத்தில் வெளிப்படைத்தன்மையைப் பராமரிக்கும் வகையில், ரூ.10 மதிப்பில் 4 கோடி ரசீதுகளும், ரூ.100 மதிப்பில் 8 கோடி ரசீதுகளும், ரூ.1,000 மதிப்பில் 12 லட்சம் ரசீதுகளும் அச்சிடப்பட்டுள்ளன. நன்கொடை வசூலிப்பில் எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை. அதேபோல, கோவில் கட்டுமானப் பணிக்கு எவ்வளவு செலவாகும் என்றும் மதிப்பிடப்படவில்லை.”

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story