பா.ஜனதாவுடன் தேவேகவுடா கட்சி இணைப்பா? - எடியூரப்பா விளக்கம்
பா.ஜனதாவுடன் தேவேகவுடா கட்சி இணைய உள்ளதா என்பது குறித்து எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார்.
பெங்களூரு,
பா.ஜனதாவுடன் தேவேகவுடாவின் ஜனதா தளம்(எஸ்) கட்சி இணைய உள்ளதாக வெளியாகி வரும் தகவலால் கர்நாடக அரசியலில் திடீரென்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை முதல்-மந்திரி எடியூரப்பா மறுத்துள்ளார்.
கர்நாடகாவில் சமீபகாலமாக பா.ஜனதாவுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சி நெருக்கம் காட்டி வருகிறது. சமீபத்தில் கர்நாடக மேல்-சபையில் வேளாண்மை சந்தைகள் சட்டம் நிறைவேற ஆதரவு வழங்கியது. மேலும் ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவரான குமாரசாமி பா.ஜனதா தலைவர்களை விமர்சிப்பதை தவிர்த்து வருகிறார். அதே வேளையில் காங்கிரஸ் தலைவர்களை அவர் கடுமையாக தாக்கி பேசி வருகிறார்.
அவ்வப்போது எடியூரப்பாவை குமாரசாமி நேரில் சந்தித்து பேசுகிறார். இதற்கிடையே சமீபத்தில் பிறந்த நாளையொட்டி குமாரசாமிக்கு பிரதமர் மோடி உள்பட பா.ஜனதா தலைவர்கள் வாழ்த்து மழை பொழிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்ற விஷயங்கள் பா.ஜனதா-ஜனதா தளம்(எஸ்) இணைப்பு குறித்து வெளியாகும் தகவலுக்கு வலு சேர்ப்பதாக உள்ளது. இந்த நிலையில் ஜனதாதளம் (எஸ்) கட்சி, பா.ஜனதாவுடன் இணையும் என்று கர்நாடக பா.ஜனதா துணைத் தலைவர் அரவிந்த் லிம்பாவளி நேற்று தெரிவித்தார். ஆனால் இதனை ஜனதா தளம்(எஸ்) கட்சியினர் மறுத்துள்ளனர்.
மேலும் முதல்-மந்திரி எடியூரப்பாவும் மறுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடக மேல்-சபை தலைவர் தேர்தலில் பா.ஜனதாவுக்கு ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆதரவு வழங்கியுள்ளது. ஆனால் அக்கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் யாரும் எங்கள் கட்சியில் சேரவில்லை. பா.ஜனதாவுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சி இணைக்கப்படுவதாக வெளியாகியுள்ள தகவல் முற்றிலும் தவறானது.
அத்தகைய சூழ்நிலை எழவில்லை. மேல்-சபை தலைவர் விஷயத்தில் மட்டுமே குமாரசாமி எங்களுக்கு ஆதரவு வழங்குகிறார். இதை தவிர வேறு எந்த விஷயமும் இரு கட்சிகளிடையே இல்லை.
பசுவதை தடை சட்ட மசோதாவுக்கு தங்களின் ஆதரவு இல்லை என்று குமாரசாமி தெளிவாக கூறியுள்ளார். நாங்கள் அவசர சட்டம் மூலம் பசுவதை தடையை அமலுக்கு கொண்டு வருகிறோம். கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளுக்கு மேல் உள்ளது. இதற்கிடையே வரும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை” என்று எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story