மதரீதியாக எந்த பாகுபாடும் இன்றி அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பினருக்கும் சென்றடைகின்றன - அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழக விழாவில் பிரதமர் மோடி பேச்சு


Twitter/BJP
x
Twitter/BJP
தினத்தந்தி 22 Dec 2020 2:14 PM GMT (Updated: 22 Dec 2020 2:14 PM GMT)

மதரீதியாக எந்த பாகுபாடுகளும் இன்றி அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பினருக்கும் சென்றடைகின்றன என அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பேசினார்.

லக்னோ

உத்தரப்பிரதேசம் அலிகர் நகரின் பழம்பெரும் மத்தியப் பல்கலைழகம் அமைந்து நூற்றாண்டுகள் நிறைவு பெற்றுள்ளன. இதற்கான விழா இணையதளம் வழியாக நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்தர மோடி முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார். 

தனது உரையில் பிரதமர் மோடி கூறியதாவது:

அலிகர் முஸ்லிம் பல்கலைகழகத்தின் மாணவர்கள் தம் வளாகத்தில் ‘ஒரே இந்தியா, உன்னதமான இந்தியா’ எனும் குறிக்கோளை நாளுக்கு நாள் உறுதிப்படுத்த வேண்டும். இதற்காக அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும்.

கொரோனா தொற்று நேரத்தில் சமூகத்துக்கு அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் இதுவரை இல்லாத அளவுக்கு தனது பங்களிப்பு செய்துள்ளது. மக்களை இலவச பரிசோதனைகளை மேற்கொள்ள வைத்தது, தனிமைப்படுத்தும் வார்டுகள் மற்றும் பிளாஸ்மா வங்கிகளை உருவாக்கியது மற்றும் பிரதமரின் நல நிதிக்கு மிகப் பெரிய தொகையை வழங்கியது இவை சமூகத்திற்கான உங்கள் கடமைகளை நிறைவேற்றுவதன் தீவிரத்தை காட்டுகிறது. இதுபோன்ற ஒருங்கிணைந்த முயற்சிகளால், இந்தியா கொரோனா தொற்றுக்கு எதிராக வெற்றிகரமாக போராடி, நாட்டை உயர்ந்த இடத்தில் வைத்துள்ளது.

கடந்த 100 ஆண்டுகளில், உலகின் பல நாடுகளுடன், இந்தியாவின் உறவை வலுப்படுத்த அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் பணியாற்றியுள்ளது. உருது, அராபிக், மற்றும் பெர்சிய மொழிகளில் இங்கு செய்யப்பட்டுள்ள ஆராய்ச்சி, ஒட்டு மொத்த இஸ்லாமிய நாடுகளுடன், இந்தியாவுக்கு உள்ள கலாசார உறவுக்கு புதிய சக்தியை அளிக்கிறது. பல்கலைக்கழகத்தின் திறமையை மேலும் மேம்படுத்துவதோடு, தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான கடமையை நிறைவேற்றும் இரட்டை பொறுப்பு பல்கலைக்கழகத்திற்கு உள்ளது.

ஒரு காலத்தில் கழிவறைகள் பற்றாக்குறை காரணமாக, முஸ்லிம் மாணவிகள் கல்வியை பாதியில் நிறுத்துவது 70 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தது. தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் பள்ளி செல்லும் மாணவிகளுக்கு தனி கழிப்பறைகளை இந்த அரசு கட்டியது. 

தற்போது முஸ்லிம் மாணவிகள் பள்ளிக்கல்வியை பாதியில் நிறுத்துவது 30 சதவீதமாக குறைந்துள்ளது. பள்ளி கல்வியை பாதியில் நிறுத்திய மாணவர்களுக்கான சிறப்புப் படிப்புகளை அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் நடத்துவது பாராட்டுக்குரியது. 

முஸ்லிம் பெண்களின் கல்வி மற்றும் அவர்களின் மேம்பாட்டில் அரசு அதிக அக்கறை செலுத்துகிறது. கடந்த 6 ஆண்டுகளில், சுமார் ஒரு கோடி முஸ்லிம் மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகையை இந்த அரசு வழங்கியுள்ளது. பாலின அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்க கூடாது, ஒவ்வொருவருக்கும் சம உரிமை கிடைக்க வேண்டும், நாட்டின் வளர்ச்சியின் பயனை ஒவ்வொருவரும் பெற வேண்டும்.

தற்போது நாடு செல்லும் பாதையில் மதரீதியாகவும் எந்த பாகுபாடுகளும் இன்றி அரசின் திட்டங்கள் அனைத்து தரப்பினருக்கும் சென்றடைகின்றன. தேசநலனின் வளர்ச்சிக்கானக் குறிக்கோள்களை நிறைவேற்றுவதில் நம் தனிப்பட்ட கொள்கைகளை விலக்கி வைக்க வேண்டும்.மதம் காரணமாக எவரும் பின்னுக்கு தள்ளப்படமாட்டார்கள்.
 
அனைவருடனும் அனைவருக்கும் வளர்ச்சி எனும் கொள்கைதான் அனைத்து மதங்களின் அடிப்படை மந்திரமாக உள்ளது. இந்த உறுதி நம் நாட்டின் கொள்கைகளிலும் எதிரொலிக்கிறது. முஸ்லிம் சமூகத்தில் இருந்த முத்தலாக் முறையும் முடிவிற்கு வந்துள்ளது. முஸ்லிம் பெண்கள் பாதியிலேயே கல்வியை விட்டு விடும் சதகிதமும் குறைந்துள்ளது.

முத்தலாக் முறையை முடிவுக்கு கொண்டு வந்து, நவீன முஸ்லிம் சமூகத்தை உருவாக்கும் முயற்சிகளை நாடு முன்னெடுத்தது. ஒரு பெண் கல்வி கற்றவராக இருந்தால், ஒட்டு மொத்த குடும்பமே கல்வி கற்றதாகிவிடும் என முன்பு கூறப்பட்டது. 

கல்வி தன்னுடன் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவை கொண்டு வருகிறது. வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவு தன்னுடன் பொருளாதார சுதந்திரத்தை கொண்டு வருகிறது. பொருளாதார சுதந்திரத்தில் இருந்துதான் மேம்பாடு வருகிறது. அதிகாரம் பெற்ற பெண் ஒருவர், ஒவ்வொரு முடிவிலும், ஒவ்வொரு மட்டத்திலும், மற்றவர்களைபோல் சம அளவு பங்களிப்பை அளிக்கிறார்.

உயர் கல்வியில் தனது சமகால பாடத்திட்டங்கள் மூலம் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் பலரை கவர்ந்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் ஏற்கெனவே கற்பிக்கப்பட்டதை போன்ற உள் ஒழுங்குமுறை பாடங்களை புதிய கல்வி கொள்கை கொண்டுள்ளது. முதலாவது நாடுதான் என்ற அழைப்பால், இந்நாட்டு இளைஞர்கள் நாட்டை முன்னேற்றுவதில் உறுதிபூண்டுள்ளனர். இளைஞர்களின் இந்த ஆசைக்கு, புதிய கல்வி கொள்கையில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு படிப்பில் பல முறை சேருவது, வெளியேறுவது என புதிய கல்வி கொள்கையில் உள்ள நடைமுறை, கல்வி தொடர்பாக

 மாணவர்கள் முடிவெடுப்பதை எளிதாக்கும். ஒட்டுமொத்த படிப்புக்கான கட்டணம் பற்றி கவலைப்படாமல், மாணவர்கள் முடிவெடுக்கும் சுதந்திரத்தை இது வழங்குகிறது.

உயர் கல்வியில் இடங்களையும், மாணவர்களின் பதிவையும் அதிகரிக்க அரசு தொடர்ந்து பணியாற்றி வருகிறது. நேரடி கல்வி அல்லது ஆன்லைன் கல்வி எதுவாக இருந்தாலும், இது அனைவருக்கும் சென்று ஒவ்வொருவரின் வாழ்வில் மாற்றங்களை உறுதி செய்வதற்கு அரசு பணியாற்றிக் கொண்டிருக்கிறது. இந்திய சுதந்திரத்தின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு, குறைவாக அறியப்பட்ட சுதந்திர போராட்ட வீரர்கள் பற்றிய ஆய்வை, இந்த பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழாவில், இங்குள்ள 100 விடுதிகள் கூடுதல் பணியாக மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் கூறினார்.

விழாவில் மத்திய கல்வித்துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் நிஷாங், பல்கலைழக துணைவேந்தர் பேரசியர் தாரீக் மன்சூர், வேந்தரான சைதனா முப்தல் சைபுத்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Next Story