புதிய பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசின் அழைப்பை விவசாயிகள் அமைப்பு ஏற்குமா? - இன்று முடிவு


புதிய பேச்சுவார்த்தை நடத்த மத்திய அரசின் அழைப்பை விவசாயிகள் அமைப்பு ஏற்குமா? - இன்று முடிவு
x
தினத்தந்தி 23 Dec 2020 3:21 AM GMT (Updated: 23 Dec 2020 3:21 AM GMT)

டெல்லியில் போராடும் விவசாய அமைப்புகளை புதிய பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு அழைத்துள்ளது. இதில் பங்கேற்பது குறித்த முடிவை விவசாய அமைப்புகள் இன்று எடுக்கின்றன.

புதுடெல்லி, 

சீர்திருத்தம் என்ற பெயரில் மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், தங்களை கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடியில் சிக்க வைத்து விடும் என்று விவசாயிகள் கருதுகின்றனர். எனவே இந்த சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு அவர்கள் நடத்தி வருகிற போராட்டம் நேற்று 27-வது நாளை அடைந்தது. வாட்டி வதைக்கும் குளிருக்கு மத்தியிலும் தங்கள் போராட்டத்தை அவர்கள் தொடர்கின்றனர்.

மத்திய அரசு அவர்களுடன் 5 சுற்று பேச்சு நடத்தியும் முடிவில்லை. இரு தரப்பினரும் தத்தமது நிலையில் அசைந்து கொடுப்பதாக இல்லை என்ற நிலையால் போராட்டம் தொடர்கதையாய் நீளுகிறது.

இந்த நிலையில் விவசாயிகள் அமைப்புகளுடன் புதிய பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்து 40 விவசாய அமைப்புகளின் தலைவர்களுக்கு மத்திய விவசாயத்துறை இணைச்செயலாளர் விவேக் அகர்வால் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அதில் அவர், சட்டங்களில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த அரசின் முந்தைய யோசனைகள் குறித்த தங்கள் கவலைகளை விவசாய அமைப்புகள் தெரிவிக்கலாம், போராட்டத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வர அடுத்த சுற்று பேச்சுவார்த்தைக்கு வசதியான தேதியை தெரிவிக்கலாம் என கூறி உள்ளார்.

இந்த நிலையில் டெல்லி சிங்கு எல்லையில் விவசாய அமைப்பு ஒன்றின் தலைவரான குல்வந்த் சிங் சந்து, நேற்று நிருபர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து பஞ்சாப்பை சேர்ந்த 32 விவசாய அமைப்புகள் கூடி பேசினோம். நாடு முழுவதும் உள்ள விவசாய அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொள்ளும் கூட்டம் புதன்கிழமையன்று (இன்று) நடைபெறும். அதில் புதிய பேச்சுவார்த்தைக்கான மத்திய அரசின் அழைப்பு பற்றி முடிவு எடுக்கப்படும்.

இந்திய குடியரசு தின விழா கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக கலந்துகொள்ள இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் முன்வந்துள்ளார். அவர் இந்தியா வரக்கூடாது என வலியுறுத்துமாறு இங்கிலாந்து எம்.பி.களுக்கு கடிதம் எழுதுவோம். 

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
  • chat