பிரதமர் மோடியின் பேச்சுக்கு, போராடும் விவசாய அமைப்புகள் பதில்


பிரதமர் மோடியின் பேச்சுக்கு, போராடும் விவசாய அமைப்புகள் பதில்
x
தினத்தந்தி 25 Dec 2020 8:27 PM GMT (Updated: 26 Dec 2020 12:41 AM GMT)

போராடும் விவசாய அமைப்புகள், பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதில் அளித்துள்ளன. அவை, குறைந்தபட்ச ஆதரவு விலை மீது சட்டப்பூர்வ உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று கூறின.

புதுடெல்லி, 

விவசாயிகளின் வங்கி கணக்குகளில் தலா ரூ.2 ஆயிரம் வீதம் ரூ.18 ஆயிரம் கோடியை பிரதமர் நரேந்திர மோடி நேற்று செலுத்தி, காணொலி காட்சி வழியாக விவசாயிகளுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் கூறிய கருத்துகள் குறித்து பல்வேறு விவசாய அமைப்புகள் பதில் அளித்துள்ளன. அது வருமாறு:-

ரா‌‌ஷ்ட்ரீய கிசான் மகா சங்கத்தின் செய்தி தொடர்பாளர் அரிமன்யு கோஹார்:-

அரசாங்கம், பிரச்சினையை திசை திருப்புகிறது. பிற அரசியல் கட்சிகளால் நாங்கள் தவறாக வழிநடத்தப்படுகிறோம் என்ற பிரதமரின் கருத்து தவறானது. கடந்த ஒரு மாதமாக போராடி வருகிற நாங்கள் எங்கள் தளத்தை எந்த அரசியல்வாதிக்கும் வழங்கவில்லை. உள்ளபடியே சொல்வதானால், எங்கள் மேடையை அவர்கள் பயன்படுத்துவதை தடை செய்திருக்கிறோம். எங்கள் போராட்டம் அரசியல் சார்பற்றது.

சங்க்யுத் கிசான் மோர்ச்சா அமைப்பின் மூத்த தலைவர் சிவகுமார் கக்கா:-

பிரதமர் மோடி அவரது பேச்சுக்களில் குறைந்தபட்ச ஆதரவு விலை முறை தொடரும் என்கிறார். பிறகு ஏன் அதற்கு சட்டப்பூர்வ உத்தரவாதம் வழங்க பயப்படுகிறார்? இதை எழுத்துப்பூர்வமாக அரசாங்கம் ஏன் தரக்கூடாது?

பிரதமர் தனது பேச்சில் விவசாயிகளை பிளவுபடுத்தவும், தவறாக வழிநடத்தவும் முயற்சித்துள்ளார். தேர்தல் பிரசாரங்களில் அவர் பேசும்போது எம்.எஸ்.சுவாமிநாதன் கமிட்டி பரிந்துரைகள்படி தனது அரசு குறைந்தபட்ச ஆதரவு விலையை நிர்ணயித்துள்ளதாக கூறுகிறார். ஆனால் கோர்ட்டில் அப்படி செய்வது சாத்தியம் இல்லை என்று அவர்கள் கூறி உள்ளனர்.

அனைத்திந்திய கிசான் சங்கார்‌‌ஷ் அமைப்பின் ஒருங்கிணைப்பு செயலாளர் அவிக் சஹா:-

குறைந்தபட்ச ஆதரவு விலை முறைக்கு அரசு ஏன் சட்ட உத்தரவாதம் அளிக்கவில்லை என்று அறிய விரும்புகிறோம். பிரதமர் 6 மாநில விவசாயிகளுடன்தான் கலந்துரையாடி உள்ளார். ஏன், அவர் போராடும் விவசாயிகள் பிரச்சினையை பேசவில்லை?

எப்படி தவறாக வழிநடத்த முடியும்?

கிரந்திகாரி கிசான் யூனியன் (பஞ்சாப்) அமைப்பின் மாநில ஊடக செயலாளர் அவதார்சிங் மெஹ்மா:-

சில விவசாயிகள் 3 வேளாண் சட்டங்களுக்கு ஆதரவாக இருப்பதாக பிரதமர் கூறுவது தவறானது. நாங்கள் டெல்லிக்கு வருவதற்கு முன் காங்கிரஸ், சிரோமணி அகாலிதாளம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகளை குறி வைத்தோம். எனவே நாங்கள் எப்படி இந்த அரசியல் கட்சிகளால் தவறாக வழிநடத்தப்பட முடியும்?

இவ்வாறு அவர்கள் கருத்து தெரிவித்தனர்.


Next Story