சட்டசபையை கூட்ட மறுப்பு; 2 அமைச்சர்கள், கேரள கவர்னருடன் சந்திப்பு


சட்டசபையை கூட்ட மறுப்பு; 2 அமைச்சர்கள், கேரள கவர்னருடன் சந்திப்பு
x
தினத்தந்தி 25 Dec 2020 11:31 PM GMT (Updated: 25 Dec 2020 11:31 PM GMT)

சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன், வேளாண் அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார் ஆகியோர் நேற்று கவர்னர் ஆரிப் முகமத்கானை சந்தித்து பேசினார்கள்.

திருவனந்தபுரம், 

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கேரள சட்டசபை சிறப்பு கூட்டத்தை கூட்ட கவர்னருக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதை அவர் நிராகரித்துவிட்டார். இந்தநிலையில் முதல்-மந்திரி பினராயி விஜயன், ஒருநாள் கூட்டம் நடத்துவதற்கு நேற்றுமுன்தினம் மீண்டும் கோரிக்கை வைத்தார்.

இந்தநிலையில் சட்டத்துறை அமைச்சர் ஏ.கே.பாலன், வேளாண் அமைச்சர் வி.எஸ்.சுனில்குமார் ஆகியோர் நேற்று கவர்னர் ஆரிப் முகமத்கானை சந்தித்து பேசினார்கள். 35 நிமிடங்களுக்கு இந்த சந்திப்பு நீடித்தது. பின்னர், நிருபர்களிடம் பேசிய வேளாண் அமைச்சர் சுனில்குமார், ‘‘கவர்னர் இந்த முறை டிசம்பர் 31-ல் கூட்டம் நடத்துவது பற்றி நல்ல முடிவை அறிவிப்பார் என்று நம்புவதாகவும், அவர் பரிந்துரைத்த சில வி‌‌ஷயங்கள் பற்றி முதல்-மந்திரியுடன் விவாதிக்க வேண்டும்’’ என்று கூறினார். ஆனால் ஜனவரி 8-ல் தொடங்க வேண்டிய வழக்கமான சட்டசபை கூட்டத்தொடர் பற்றி கேட்டபோது அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

அதே நேரத்தில் சட்ட அமைச்சர் பாலன், தினசரிகளில் வெளியிட்ட கட்டுரையில், ‘‘கவர்னர் ஒப்புதல் அளிக்காதது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. இதை கவர்னருக்கும், அரசுக்குமான தனிப்பட்ட வி‌‌ஷயமாக கருதக்கூடாது. துரதிர்‌‌ஷ்டவசமான இந்த வி‌‌ஷயம் தவறான முன்னுதாரணமாகிவிடக்கூடாது’’ என்று கூறியுள்ளார்.

கம்யூனிஸ்டுகளின், யூடியூப் தளத்தில், ‘‘கவர்னர் தற்போதும் சட்டசபை கூட்ட பரிந்துரையை நிராகரித்தால், பதவியில் இருந்து அவரை திரும்ப அழைப்பதற்கான கோரிக்கையில் சட்டசபை ஒன்று கூடும்’’ என்று கூறியுள்ளனர்.

Next Story