டெல்லி பேரணியில் தடுப்புகள் உடைப்பு; தடுத்து நிறுத்த முயன்ற 2 போலீஸ் அதிகாரிகள் காயம்


டெல்லி பேரணியில் தடுப்புகள் உடைப்பு; தடுத்து நிறுத்த முயன்ற 2 போலீஸ் அதிகாரிகள் காயம்
x
தினத்தந்தி 26 Jan 2021 11:35 AM GMT (Updated: 26 Jan 2021 11:35 AM GMT)

டெல்லி பேரணியில் காஜிப்பூர் எல்லையில் தடுப்புகளை உடைத்த விவசாயிகளை தடுக்க முயன்ற 2 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர்.

புதுடெல்லி,

டெல்லியில் கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக வேளாண் சட்ட எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமுடன் நடந்து வருகின்றன.  குடியரசு தினத்தன்று டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்படும் என விவசாய சங்கங்கள் அறிவிப்பு வெளியிட்டன.  இதற்கு டெல்லி போலீசார் சார்பில் அனுமதியும் வழங்கப்பட்டது.

எனினும், டெல்லி போலீசார் அனுமதித்த பகுதியை தவிர்த்து வேறு பகுதிகளில் விவசாயிகள் தடுப்பான்களை உடைத்து செல்ல முயன்றனர்.  இந்த பேரணியில் காஜிப்பூர் எல்லையில் தடுப்புகளை உடைத்த விவசாயிகளை தடுக்க முயன்ற 2 போலீஸ் அதிகாரிகள் காயம் அடைந்துள்ளனர்.

இதுபற்றி டெல்லி போலீசார் கூறும்பொழுது, காஜிப்பூர் எல்லையில் இன்று காலை தடுப்பான்களை உடைத்து கொண்டு முன்னேற முயன்ற விவசாயிகளை தடுத்து நிறுத்தும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

இந்த சம்பவத்தில் கூடுதல் காவல் ஆணையர் ஒருவர் மற்றும் ஐ.பி.எஸ். அதிகாரி அந்தஸ்தில் உள்ள ஒருவர் என 2 போலீசார் காயமடைந்து உள்ளனர்.  அவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளனர்.

Next Story