குடியரசு தின கொண்டாட்டம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து


குடியரசு தின கொண்டாட்டம்:  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முக்கிய பிரமுகர்களுக்கு விருந்து
x
தினத்தந்தி 26 Jan 2021 2:36 PM GMT (Updated: 26 Jan 2021 2:36 PM GMT)

நாட்டின் குடியரசு தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தனது இல்லத்தில் இன்று விருந்து அளித்து வருகிறார்.

புதுடெல்லி,

நாட்டின் 72வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.  குடியரசு தினவிழா கொண்டாட்டத்தின் முதல் நிகழ்வாக, போர் நினைவுச்சின்னத்தில், நாட்டுக்காக வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.

இதன்பின்னர், நாட்டுக்காக உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு பிரதமர் மோடி மவுன அஞ்சலி செலுத்தினார். பின்னர் பிரதமர் மோடி அங்கிருந்து நேராக அணிவகுப்பை பார்வையிடுவதற்காக ராஜபாதைக்கு வருகை தந்தார்.

அவரை தொடர்ந்து ராஜபாதைக்கு வருகை தந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை பிரதமர் மோடி வரவேற்றார். இதனையடுத்து மூவர்ண கொடியை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றி வைத்தார். பாரம்பரிய முறைப்படி தேசிய கொடி ஏற்றப்பட்டு, 21 குண்டுகள் முழங்க தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

தொடர்ந்து முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார்.  குடியரசு தினத்தின் ஒரு பகுதியாக ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு இன்று விருந்து அளித்து வருகிறார்.

இந்த விருந்து நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் மோடி, ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங் மற்றும் வெளிவிவகார மந்திரி எஸ். ஜெய்சங்கர் மற்றும் பிற மந்திரிகளும் கலந்து கொண்டு உள்ளனர்.

இதேபோன்று பாதுகாப்பு படைகளின் தலைவர் பிபின் ராவத், ராணுவ தலைமை தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, கடற்படை தலைமை தளபதி கரம்பீர் சிங், இந்திய விமான படை தலைமை தளபதி ஆர்.கே.எஸ். பதாரியா ஆகியோரும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்துள்ளனர்.

Next Story