டெல்லி வன்முறையை தொடர்ந்து விவசாயிகளுக்கு பஞ்சாப் முதல்வர் கோரிக்கை


டெல்லி வன்முறையை தொடர்ந்து விவசாயிகளுக்கு பஞ்சாப் முதல்வர் கோரிக்கை
x
தினத்தந்தி 26 Jan 2021 8:12 PM GMT (Updated: 26 Jan 2021 8:12 PM GMT)

டெல்லி நகருக்குள் இருந்து வெளியேறி அனைவரும் எல்லைக்கு திரும்ப வேண்டும் என்று உண்மையான விவசாயிகளை நான் வலியுறுத்துகிறேன் என்று அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

மத்திய அரசு, வேளாண் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியுள்ளது. இந்த சட்டங்கள், வேளாண் விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் இல்லாதவை என்றும், ஒழுங்குமுறை விற்பனை கூடங்களை மூடச்செய்து விடும் என்றும், கார்ப்பரேட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் விவசாயிகளை தள்ளிவிடும் என்றும் விவசாய சங்கங்கள் அச்சம் தெரிவித்துள்ளன.

எனவே, 3  சட்டங்களையும் ரத்து செய்யக்கோரி, பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள், டெல்லி எல்லை பகுதிகளை முற்றுகையிட்டு கடந்த 60 நாட்களுக்கு மேலாக போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

அவர்களுடன் மத்திய அரசு 11 சுற்று பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், அவற்றில் உடன்பாடு ஏற்படவில்லை. வேளாண் சட்டங்களை ஒன்றரை ஆண்டுகள் நிறுத்தி வைப்பதாக மத்திய அரசு கூறியதையும் விவசாயிகள் நிராகரித்தனர்.

தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, குடியரசு தினத்தன்று (நேற்று) டெல்லியில் டிராக்டர் பேரணி நடத்தப்போவதாக விவசாய சங்கங்கள் அறிவித்தன. அதற்கு தடை விதிக்கக்கோரி மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. ஆனால், சுப்ரீம் கோர்ட்டு தலையிட மறுத்து விட்டது. டிராக்டர் பேரணியை டெல்லிக்கு வெளியே மாற்றுப்பாதையில் நடத்துமாறு போலீஸ்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. அதை விவசாயிகள் ஏற்கவில்லை.

இதனால், டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு முடிந்த பிறகு, சிங்கு, திக்ரி, காசிப்பூர் ஆகிய எல்லைகளில் இருந்து நடத்திக்கொள்ளலாம் என்ற நிபந்தனையுடன் டிராக்டர் பேரணிக்கு டெல்லி போலீஸ் அனுமதி வழங்கியது.

இந்த நிலையில், பஞ்சாப், அரியானா, உத்தரபிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து 1 லட்சத்துக்கு மேற்பட்ட டிராக்டர்களில் விவசாயிகள் நேற்று டெல்லி எல்லை பகுதிகளில் குவிந்தனர்.டெல்லியில் குடியரசு தின அணிவகுப்பு முடிவடைவதற்கு முன்பே, விவசாயிகளில் ஒரு பிரிவினர், சிங்கு, திக்ரி, காசிப்பூர் எல்லை பகுதிகளில் போலீ்ஸ் தடுப்புகளை டிராக்டர்களால் மோதி உடைத்து அகற்றினர். அணிவகுப்பு முடிந்த பிறகு பேரணி நடத்தவே அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர்களிடம் போலீசார் வாதிட்டனர்.

விவசாயிகள் பிடிவாதத்தால், இருதரப்புக்கும் இடையே பல இடங்களில் வாக்குவாதம் நடந்தது. வாக்குவாதம் முற்றி, தடியடி நடத்தும் நிலைக்கு சென்றது. சிந்தாமணி சவுக் என்ற இடத்தில் தடுப்புகளை அகற்றியதுடன், அங்கிருந்த கார்களின் கண்ணாடியையும் விவசாயிகள் உடைத்ததால் அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

அக்‌ஷர்தாம் கோவில் அருகே ‘நிஹாங்’ எனப்படும் சீக்கிய வீரர்கள், போலீசாருடன் மோதினர். சிங்கு எல்லையில் இருந்து நேராக வெளிவட்டச்சாலைக்குள் செல்ல முயன்ற சில விவசாயிகள் மீது போலீசார் கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். நங்லோய் சவுக், முகர்பா சவுக் ஆகிய இடங்களிலும் விவசாயிகள் மீது கண்ணீர்புகை குண்டுகள் வீசப்பட்டன.

அத்தனையையும் மீறி விவசாயிகள் டெல்லி நகருக்குள் நுழைந்தனர். அனுமதிக்கப்பட்ட பாதையை தவிர்த்து, சில விவசாயிகள், நாடாளுமன்றத்துக்கு சில கி.மீ. தொலைவில் உள்ள ஐ.டி.ஓ. பகுதிவரை சென்று விட்டனர். அங்கிருந்து முக்கிய கட்டிடங்கள் அமைந்துள்ள லுட்யன் பகுதிக்கு செல்ல முயன்றனர். அவர்களை கலைக்க போலீசார், தடியடி நடத்தினர். கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். சில விவசாயிகள், கம்பை எடுத்துக்கொண்டு போலீசாரை விரட்டினர். அங்கு நிறுத்தப்பட்டிருந்த பஸ்களை, டிராக்டர்களைக் கொண்டு மோதினர். அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

இந்த களேபரத்துக்கு இடையே சில விவசாயிகள் டிராக்டர்களுடன் செங்கோட்டை வளாகத்துக்குள் புகுந்தனர். வரலாற்று சிறப்புமிக்க செங்கோட்டை கட்டிடத்தின் மீது ஏறினர். அங்கு சுதந்திர தினத்தன்று பிரதமர் தேசிய கொடி ஏற்றும் கம்பத்தில் கொடி ஏற்றினர். கட்டிடத்தின் பல இடங்களில் சீக்கிய மதக்கொடிகளையும், சங்க கொடிகளையும் ஏற்றினர். பின்னர், அந்த கொடிகளை கீழே இறக்க போலீசார் போராடியதை பார்க்க முடிந்தது.

செங்கோட்டை வளாகத்துக்குள் விவசாயிகள் இருந்தபோது, அவர்கள் அமைதியாக வெளியேற வேண்டும் என்று போலீசார் ‘மைக்’ மூலம் கூறியபடி இருந்தனர். ஒரு கட்டத்தில் லேசான தடியடி நடத்தினர். ஒன்றரை மணி நேர போராட்டத்துக்கு பிறகு விவசாயிகள் வெளியேற்றப்பட்டனர்.

அதன்பிறகும் சில விவசாயிகள், செங்கோட்டைக்கு வெளியே சாலையில் நின்று கொண்டிருந்தனர். முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, 10-க்கு மேற்பட்ட மெட்ரோ ரெயில் நிலையங்களின் நுழைவாயில்கள் மூடப்பட்டன.

போலீஸ் தடுப்புகளை அகற்றி முன்கூட்டியே நகருக்குள் நுழைந்தவர்கள், கிசான் மஸ்தூர் சங்கர்ஷ் கமிட்டி என்ற அமைப்பை சேர்ந்தவர்கள் என்று 41 விவசாய சங்கங்கள் அடங்கிய கூட்டு அமைப்பான சன்யுக்த் கிசான் மோர்ச்சா தெரிவித்தது. வன்முறைக்கும், தங்கள் அமைப்புக்கும் சம்பந்தம் இல்லை என்றும் கூறியது. 

பஞ்சாப் முதல்வர் கண்டனம்

டெல்லி விவசாயிகள் போராட்டத்தில்  நடைபெற்ற வன்முறைக்கு பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமரீந்தர் சிங், “ டெல்லியில் அதிர்ச்சிகரமான  காட்சிகள் அரங்கேறியுள்ளன.  சில சக்திகளால் ஏற்பட்ட வன்முறை ஏற்றுக்கொள்ள முடியாதது. 

அமைதியான போராட்டத்தால் ஏற்பட்ட நற்பெயரை இந்த வன்முறை கெடுத்துவிடும். டிராக்டர் பேரணியை உடனடியாக விவசாய சங்க தலைவர்கள் ரத்து செய்ய வேண்டும். டெல்லி நகருக்குள்  இருந்து வெளியேறி அனைவரும் எல்லைக்கு திரும்ப வேண்டும் என்று உண்மையான விவசாயிகளை நான் வலியுறுத்துகிறேன்” என்று பதிவிட்டுள்ளார். 

Next Story