2020-21 பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?


2020-21 பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் என்னென்ன?
x
தினத்தந்தி 29 Jan 2021 10:07 PM GMT (Updated: 30 Jan 2021 5:40 AM GMT)

நாடாளுமன்றத்தில் பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், அடுத்த நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி, 

ஜனாதிபதி உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பிப்ரவரி 1-ந் தேதி (திங்கட்கிழமை) 2021-22-ம் நிதி ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதால் மரபுப்படி முந்தைய நாளில் பொருளாதார ஆய்வறிக்கை சமர்ப்பிக்கப்பட வேண்டும்.

அதன்படி, இந்தியாவின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன் தயாரித்து அளித்த ஆய்வறிக்கையை நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். அதில் பொருளாதார குறியீடுகளிலும் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் பின்னடைவுகள் குறித்து விரிவான புள்ளிவிவரங்கள் இடம் பெற்றிருந்தன.

2020-21 பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* நடப்பு நிதி ஆண்டில் நாட்டின் பொருளாதாரம் 7.7 சதவீதம் சரிவடையும். எதிர்வரும் 2021-22-ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி 11 சதவீதமாக இருக்கும். அதே சமயம் பணவீக்க அடிப்படையிலான வளர்ச்சி 15.4 சதவீதமாக இருக்கும்.

* புத்தாக்கத்தில் முன்னணி வகிக்கும் 50 நாடுகளின் பட்டியலில், கடந்த 2020-ம் ஆண்டில் நம் நாடு முதல் முறையாக இடம் பிடித்துள்ளது.

* மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி) நிதி்பற்றாக்குறையின் அளவு, முந்தைய மதிப்பீடான 3.5 சதவீதத்தை தாண்டி உயரும்.

* மூன்று வேளாண் சட்டங்களும் சிறு மற்றும் குறு விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. விவசாயிகளின் மொத்த எண்ணிக்கையில் அவர்களுடைய பங்கு 85 சதவீதமாக உள்ளது.

* உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உருவெடுக்கும் லட்சியத்தை அடைய வேண்டுமானால் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளில் முதலீட்டை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது.

* பிரதமரின் ஜன் ஆரோக்கிய யோஜனா திட்டம் ஆரோக்கியக் காப்பீட்டு வசதியை அதிகரித்து உள்ளது. இத்திட்டத்தை அமல்படுத்தி இருக்கும் மாநிலங்களில் ஆரோக்கிய காப்பீட்டு வசதி உள்ள குடும்பங்களின் எண்ணிக்கை 54 சதவீதம் உயர்ந்துள்ளது. அதேவேளையில் இத்திட்டம் செயல்படுத்தப்படாத மாநிலங்களில் அத்தகைய குடும்பங்களின் எண்ணிக்கை 10 சதவீதம் சரிவடைந்துள்ளது. * கொரோனா பாதிப்பில் இருந்து நாடு மீண்டு வரும் நிலையில் ஜி.எஸ்.டி. வரி வசூல் கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து தலா ரூ.1 லட்சம் கோடியை தாண்டியுள்ளது.

* சீனா, அமெரிக்கா உடனான வர்த்தக நிலவரங்கள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. இதனால் 17 ஆண்டுகளுக்குப் பின் முதல் முறையாக நடப்புக்கணக்கில் உபரி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

* நடப்பு நிதி ஆண்டில் (2020-21) டிசம்பர் வரையிலான முதல் 9 மாதங்களில் சில்லரை விலை பணவீக்கம் சராசரியாக 6.6 சதவீத அளவிற்கு உள்ளது. டிசம்பர் மாதத்தில் மட்டும் 4.6 சதவீதமாக இருக்கிறது.

இவ்வாறு பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story