இந்தியாவின் கொரோனா பலி எண்ணிக்கையில் மராட்டியம் முதலிடம்; 51 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் இறப்பு

இந்தியாவில் கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கையில் மராட்டியம் முதலிடத்தில் உள்ளது. அங்கு இதுவரை 51 ஆயிரத்துக்கு அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.
வெற்றி முகம்
இந்தியாவில் ஓராண்டுக்கும் மேலாக கணிசமான பாதிப்புகளை நிகழ்த்தி வரும் கொரோனா தொற்று, நாட்டில் இருந்து இன்னும் முற்றிலுமாக நீங்கி விடவில்லை. அதேநேரம் தனது உச்சநிலையை விட்டு அதிகமாக சரிந்து விட்டது.
நாள்தோறும் 15 ஆயிரத்துக்கு குறைவான புதிய பாதிப்புகளும், 150-க்கு குறைவான மரணங்களுமே சமீபத்திய நாட்களில் நிகழ்ந்து வருகின்றன. இது கொரோனாவுக்கு எதிராக இந்தியா பெற்றுவரும் வெற்றிக்கு எடுத்துக்காட்டாகும்.
51,042 பேர் சாவு
இந்தியாவில் கொரோனாவால் பறிகொடுத்த உயிர்களின் அடிப்படையில், மராட்டிய மாநிலம் மிகுந்த பாதிப்பை பெற்றிருக்கிறது. அங்கு கொரோனாவால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 51 ஆயிரத்தை கடந்திருக்கிறது.
குறிப்பாக இந்தியாவில் நேற்று காலை நிலவரப்படி 1 லட்சத்து 54 ஆயிரம் பேர் கொரோனாவால் மரணித்து உள்ளனர். இதில் 51 ஆயிரத்து 42 பேர் மராட்டியர்கள் என்பது மிகுந்த அதிர்ச்சிக்குரிய அம்சமாகும்.
தமிழகம், கர்நாடகா
மராட்டியத்தை தொடர்ந்து தமிழகம் மற்றும் கர்நாடகா மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன. இந்த மாநிலங்களில் முறையே 12,350 மற்றும் 12,213 மரணங்கள் நேற்று காலை வரை நிகழ்ந்துள்ளன.
இதைப்போல டெல்லி (10,849), மேற்கு வங்காளம் (10,164), உத்தரபிரதேசம் (8,650), ஆந்திரா (7,153) ஆகிய மாநிலங்கள் கணிசமான உயிரிழப்புகளை பெற்று இருக்கின்றன. அதேநேரம் நாட்டின் மொத்த உயிரிழப்பு விகிதம் 1.44 ஆகவே உள்ளது.
13,052 பேர் பாதிப்பு
இதற்கிடையே நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் மேலும் 13 ஆயிரத்து 52 பேர் புதிதாக கொரோனாவிடம் சிக்கி இருக்கிறார்கள். இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 7 லட்சத்து 46 ஆயிரத்து 183 ஆகியிருக்கிறது.
இதைப்போல மேற்படி 24 மணி நேரத்தில் 127 மரணங்களும் நிகழ்ந்துள்ளன. இதில் அதிகபட்சமாக மராட்டியத்தில் 42 பேர் பலியாகி இருக்கின்றனர். தொடர்ந்து கேரளா (18), சத்தீஷ்கார் (9), மேற்கு வங்காளம் (9), டெல்லி (8), பஞ்சாப் (8) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
குணமடைந்தோர் எண்ணிக்கை
நேற்று காலை நிலவரப்படி இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 4 லட்சத்து 23 ஆயிரத்து 125 ஆக இருந்தது. இது மொத்த பாதிப்பில் 96.99 சதவீதம் ஆகும்.
அதேநேரம் சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.57 ஆக சரிந்து விட்டது. நேற்று காலை நிலவரப்படி வெறும் 1 லட்சத்து 68 ஆயிரத்து 784 நோயாளிகள் மட்டுமே சிகிச்சை பெற்று வந்தனர்.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் 7 லட்சத்து 50 ஆயிரத்து 964 சளி மாதிரிகள் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதன் மூலம் மொத்த பரிசோதனைகளின்எண்ணிக்கை 19 கோடியே 65 லட்சத்து 88 ஆயிரத்து 372 ஆக உயர்ந்துள்ளது.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டு உள்ளது.
Related Tags :
Next Story