மம்தா பானர்ஜி, தனித்து விடப்படுவார்; அமித்ஷா கணிப்பு
மம்தா பானர்ஜி, தன்னுடைய மருமகனுக்காக பாடுபடுகிறார். தேர்தல் வருவதற்குள் அவர் தனித்து விடப்படுவார் என்று அமித்ஷா கூறினார்.
பணம் பறிப்பு
மேற்கு வங்காள சட்டசபை தேர்தல், ஏப்ரல், மே மாதவாக்கில் நடைபெற உள்ளது. இதையொட்டி, அங்குள்ள துமுர்ஜலா என்ற இடத்தில் நேற்று பா.ஜனதா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, டெல்லியில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் அதில் பேசினார். அவர் பேசியதாவது:-
முதல்-மந்திரி மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, தாய், மண், மக்கள் என்று கோஷமிட்டு வருகிறது. ஆனால், நிஜத்தில் பார்த்தால், பணம் பறிப்பு, ஊழல், குறிப்பிட்ட பிரிவினரை திருப்திப்படுத்துதல் என்று செயல்பட்டு வருகிறது.
மருமகனுக்காக...
வருகிற சட்டசபை தேர்தலில் பா.ஜனதா நிச்சயமாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஆட்சி அமைத்த பிறகு மேற்கு வங்காளத்தை வளர்ச்சி பாதையில் திருப்புவோம்.
மோடி அரசு, மக்களுக்காக சேவை செய்து வருகிறது. ஆனால், மம்தா பானர்ஜியோ தன்னுடைய மருமகனுக்கு சேவை செய்ய பாடுபடுகிறார்.
யாரும் இருக்க மாட்டார்கள்
திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் ஏன் பா.ஜனதாவில் சேர்ந்து வருகிறார்கள் என்பதை மம்தா சிந்தித்து பார்க்க வேண்டும். அவர் மாநில மக்களை கைவிட்டதே காரணம்.
சட்டசபை தேர்தல் வருவதற்குள், மம்தா பானர்ஜியுடன் யாருமே இருக்க மாட்டார்கள். அவர் தனித்து விடப்படுவார்.
இவ்வாறு அமித்ஷா பேசினாா்.
Related Tags :
Next Story