மும்பையில் 10 மாதங்களுக்கு பிறகு பொதுமக்கள் மின்சார ரெயில்களில் பயணம்


மும்பையில் 10 மாதங்களுக்கு பிறகு பொதுமக்கள் மின்சார ரெயில்களில் பயணம்
x
தினத்தந்தி 2 Feb 2021 3:16 AM IST (Updated: 2 Feb 2021 3:16 AM IST)
t-max-icont-min-icon

மும்பையில் 10 மாதங்களுக்கு பிறகு பொதுமக்கள் மின்சார ரெயில்களில் பயணம் செய்ததால் ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.

பொது மக்களுக்கு அனுமதி
மும்பையில் கொரோனா பிரச்சினை காரணமாக கடந்த ஆண்டு மார்ச் 22-ந் தேதி முதல் மின்சார ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. கடந்த ஜூன் மாதம் 15-ந்தேதி அத்தியாவசிய பணியாளர்களுக்காக மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டது. பின்னர் அதில் படிப்படியாக வங்கி ஊழியர்கள், வக்கீல்கள் மற்றும் பெண்கள் உள்ளிட்டவர்களும் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். ஆனால் கொரோனா அச்சம் காரணமாக பொதுமக்களுக்கு மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கப்படாமல் இருந்தது.

இந்தநிலையில் மாநில அரசு தீவிர ஆலோசனைக்கு பிறகு நேற்று முதல் பொது மக்களை குறிப்பிட்ட நேரங்களில் மட்டும் மின்சார ரெயில்களில் பயணம் செய்ய அனுமதி வழங்கியது. இதன்படி பொதுமக்கள் காலை 7 மணி முதல் மதியம் 12 வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் தவிர்த்து மற்ற நேரங்களில் பயணம் செய்ய முடியும்.

அலை மோதிய கூட்டம்
இந்தநிலையில் சுமார் 10 மாதங்களுக்கு பிறகு நேற்று பொதுமக்கள் ஆர்வமாக மின்சார ரெயில்களில் பயணம் செய்தனர். காலை 7 மணி வரை மட்டுமே பயணம் செய்ய முடியும் என்பதால், அதிகாலையிலே பல ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதேபோல மதியம் 12 மணிக்கு பிறகு ரெயில் நிலையங்களில் கூட்டம் அலை மோதியது. டிக்கெட் கவுன்டர்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்து நின்று டிக்கெட்டுகளை வாங்கி சென்றனர்.

இதேபோல பிளாட்பாரம், ரெயில் நிலைய பகுதிகளிலும் நீண்ட இடைவெளிக்கு பிறகு மக்கள் கூட்டத்தை காண முடிந்தது. மேலும் மின்சார ரெயில்களும் பயணிகள் கூட்டத்தில் நிரம்பி வழிந்தன.

பலத்த பாதுகாப்பு
முன்னதாக முக்கிய ரெயில் நிலையங்களில் பயணிகள் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தடுக்க கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. சில இடங்களில் உள்ளூர் போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதேபோல ரெயில் நிலையங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்க அனைத்து பாதைகளும் திறந்து வைக்கப்பட்டன. மேலும் லிப்டு, நகரும் படிக்கட்டுகளும் செயல்பாட்டில் வைக்கப்பட்டு இருந்தன.

முககவசம் அணியாதவர்களுக்கு ரெயில் நிலையங்களுக்குள் அனுமதி மறுக்கப்பட்டது. இதேபோல ரெயில் நிலையங்களிலும் சமூக இடைவெளி உள்ளிட்ட கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்ற பயணிகள் அறிவுறுத்தப்பட்டனர்.

அபராதம்
மேலும் முகவசம் அணியாமல் கொரோனா தடுப்பு நெறிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதேபோல குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் பொதுமக்கள் மின்சார ரெயில்களில் பயணம் செய்வதை உறுதி செய்ய தீவிர டிக்கெட் பரிசோதனை செய்யப்பட்டது.

ஊரடங்கிற்கு முன் மும்பையில் 3 ஆயிரத்து 141 மின்சார ரெயில் சேவைகள் இயக்கப்பட்டன. தற்போது 2 ஆயிரத்து 985 சேவைகள் இயக்கப்படுகின்றன.

பயணிகள் மகிழ்ச்சி
இந்தநிலையில் 10 மாதங்களுக்கு பிறகு மின்சார ரெயிலில் பயணம் செய்தது குறித்து மித்திலேஷ் என்ற பயணி கூறும்போது, "நீண்ட காலத்துக்கு பிறகு மின்சார ரெயிலில் பயணம் செய்வது மகிழ்ச்சியாக உள்ளது. இப்போது தான் மும்பையே செயல்பட தொடங்கி உள்ளது போல இருக்கிறது." என்றார்.

இதேபோல எல்லா நேரங்களிலும் பொதுமக்களை மின்சார ரெயில்களில் செல்ல அனுமதிக்க வேண்டும் என தானே பா.ஜனதாவினர் மத்திய ரெயில்வேயிடம் கோரிக்கை அளித்து உள்ளனர். மேலும் மின்சார ரெயில் பயணிகளும் அதே கோரிக்கையை நேற்று வலியுறுத்தி உள்ளனர்.

Next Story