அரசு நில முறைகேடுகளுக்கு துணை நின்ற அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை; சட்டசபையில் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு


அரசு நில முறைகேடுகளுக்கு துணை நின்ற அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை; சட்டசபையில் முதல்-மந்திரி எடியூரப்பா அறிவிப்பு
x
தினத்தந்தி 2 Feb 2021 11:37 PM IST (Updated: 2 Feb 2021 11:37 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தல் அரசு நில முறைகேடுகளுக்கு துணை நின்ற அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-மந்திரி எடியூரப்பா கூறினார்.

கொரோனா வைரஸ்

கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி மாதம் 28-ந் தேதி பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. முதல் நாள் சட்டசபை கூட்டுக் கூட்டத்தில் கவர்னர் வஜூபாய் வாலா உரையாற்றினார். இந்த நிலையில் இந்த கூட்டத்தொடரின் 4-வது நாள் கூட்டம் நேற்று காலை பெங்களூரு விதான சவுதாவில் தொடங்கியது. கூட்டம் தொடங்கியதும் கேள்வி நேரம் எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன் பிறகு கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தை பா.ஜனதா உறுப்பினர் ஹரக ஞானேந்திரா தாக்கல் செய்து பேசுகையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அது கர்நாடகம் மட்டுமின்றி, இந்தியா உள்பட உலகம் முழுவதும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரவத் தொடங்கியபோது, நமது மருத்துவமனைகளில் வெறும் 600 செயற்கை சுவாச கருவிகள் தான் இருந்தன. அதன் பிறகு அதன் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டது. தற்போது மாநிலத்தில் 4,000 செயற்கை சுவாச கருவிகள் உள்ளன.

அங்கன்வாடி ஊழியர்கள்

அதே போல் வைரஸ் கிருமிகளை கொல்லும் சானிடைசர் திரவத்தை கர்நாடகத்தில் 119 நிறுவனங்கள் தயாரிக்கின்றன. மேலும் கொரோனா வைரசை கண்டறியும் பரிசோதனை கூடங்களின் எண்ணிக்கையும் 100-க்கும் மேல் அதிகரித்துள்ளது. மாநில அரசு எடுத்த இந்த நடவடிக்கைகளால் கர்நாடகத்தில் தற்போது கொரோனா பரவல் என்பது கட்டுக்குள் வந்துள்ளது.

தனியார் மருத்துவர்களின் நம்பிக்கையையும் பெற்று முதல்-மந்திரி எடியூரப்பா கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொண்டார். இந்த கொரோனாவை தடுக்கும் பணியில் கடை நிலையில் ஆஷா மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் முக்கிய பங்காற்றினர். அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று தனிமைபடுத்தும் பணிகளை மேற்கொண்டனர். மாநில அரசின் நிதிநிலை சீரான பிறகு அவர்களின் சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும்.

சுத்தமான குடிநீர்

கொரோனா ஊரடங்கின்போது, மாநிலத்தில் 16.48 லட்சம் கட்டிட தொழிலாளர்களுக்கு தலா ரூ.5,000 நிதி உதவி வழங்கப்பட்டது. இதனால் அரசுக்கு ரூ.842 கோடி செலவானது. உணவு கிடைக்காமல் பாதிக்கப்பட்ட 90 லட்சம் தொழிலாளர்களுக்கு உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. நமது நாட்டில் அனைத்து வீடுகளுக்கும் சுத்தமான குடிநீர் வழங்க பிரதமர் மோடி வீடுகளுக்கு கங்கை நீர் வினியோகம் என்ற திட்டத்தை தொடங்கியுள்ளார். கர்நாடகத்தில் இந்த திட்ட பணிகளை விரைவாக முடிக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏனென்றால் மக்களுக்கு வரும் நோய்களில் 80 சதவீதம் குடிநீரால் தான் ஏற்படுகிறது. அதனால் அனைவருக்கும் சுத்தமான குடிநீர் கிடைக்க வேண்டும். நகரங்களில் அரசு நிலங்களை சிலர் போலி ஆவணங்களை தயாரித்து மோசடி செய்கிறார்கள். உதாரணத்திற்கு என்னையே எடுத்தக் கொள்ளுங்கள். எனக்கு பெங்களூரு வளர்ச்சி ஆணையம் அமைத்த லே-அவுட் ஒன்றில் கடந்த 2009-ம் ஆண்டு ஒரு வீட்டுமனையை அரசு ஒதுக்கியது.

நில மோசடி

அதில் இதுவரை என்னால் வீடு கட்ட முடியவில்லை. சிலர் போலி ஆவணங்களை தயாரித்து அந்த வீட்டுமனைக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளனர். என்னை போன்று இன்னும் பல எம்.எல்.ஏ.க்கள் இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்களுக்கே இந்த நிலைமை ஏற்படுகிறது. இத்தகைய போலி ஆவணங்களை தயாரித்து நில மோசடியில் ஈடுபடுபவர்கள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஹரக ஞானேந்திரா கூறினார்.

அப்போது குறுக்கிட்டு பேசிய காங்கிரஸ் உறுப்பினர் எச்.கே.பட்டீல், "போலி ஆவணங்களை தயாரித்து அரசு நிலத்தை மோசடி செய்துள்ளனர். இது குறித்து நான் கணக்கு குழு தலைவராக இருந்தபோது அரசுக்கு 2 அறிக்கைகளை தாக்கல் செய்தேன். அதன் மீது முதல்-மந்திரி எடியூரப்பா நடவடிக்கை எடுத்தால், அரசுக்கு சுமார் 500 ஏக்கர் நிலம் கிடைக்கும்" என்றார். இதற்கு பதிலளித்த முதல்-மந்திரி எடியூரப்பா கூறியதாவது:-

கடும் நடவடிக்கை

சமீபத்தில் நான் பெங்களூரு வளர்ச்சி ஆணைய அதிகாரிகளுடன் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினேன். நில முறைகேடுகள் குறித்தும், அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் இன்னும் 5 மாதங்களில் பெரிய அளவில் மாற்றங்கள் நிகழும். அதற்குரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளேன்.

தயராக இருந்த வீட்டுமனைகளை ஏலம் விட்டுள்ளோம். இந்த நில முறைகேடுகளுக்கு அதிகாரிகள் துணை போகிறார்கள். இதை 100 சதவீதம் சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பெங்களூரு வளர்ச்சி ஆணையத்தில் நிச்சயம் மாற்றம் ஏற்படும். பெங்களூரு வளர்ச்சி ஆணையம் உள்பட அரசு நில முறைகேடுகளுக்கு துணை நின்ற அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் கர்நாடகத்தில் நிறைய வளர்ச்சி திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.

கல்குவாரிகள்

இதற்கு ஜல்லி, மணல் அவசியம் தேவைப்படுகிறது. அதனால் மாநிலத்தில் சட்டப்படி நடைபெற்று வரும் கல்குவாரிகளுக்கு அதிகாரிகள் எந்த இடையூறும் ஏற்படுத்தக்கூடாது. சட்டவிரோதமாக நடைெபெறும் கல்குவாரிகள் அனைத்தும் முறைப்படுத்தப்படும். அந்த குவாரிகள் சட்டப்படி விண்ணப்பித்து அரசின் அனுமதியை பெற வேண்டும். இந்த விஷயத்தில் மாவட்ட கலெக்டர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Next Story