அனாதையாக இறந்து கிடந்த முதியவர் சடலத்தை சுமந்து சென்ற பெண் எஸ்.ஐ.: குவியும் பாராட்டு


அனாதையாக இறந்து கிடந்த முதியவர் சடலத்தை சுமந்து சென்ற பெண் எஸ்.ஐ.: குவியும் பாராட்டு
x
தினத்தந்தி 3 Feb 2021 5:35 AM IST (Updated: 3 Feb 2021 5:37 AM IST)
t-max-icont-min-icon

ஆந்திரப் பிரதேசத்தில் முதியவர் ஒருவரின் சடலத்தை பெண் எஸ்.ஐ ஒருவர் சுமந்து சென்றதுடன், அவருக்கு இறுதி மரியாதை செய்யவும் உதவியது பலரின் பாராட்டுகளை பெற்றது.

ஸ்ரீகாகுளம், 

ஆந்திர மாநிலத்தில் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த காசிபக்கா நகராட்சியில், அதிவிக்கொத்துரு கிராமத்தில் விவசாய நிலத்தில் ஒரு முதியவர் இறந்து கிடப்பதாக காசிபக்கா காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற பெண் எஸ்.ஐ. ஸ்ரீஷா, முதியவரின் சடலத்தைப் பார்வையிட்டார். அந்த சடலம் அழுகி துர்நாற்றம் வீச தொடங்கி இருந்தது. எனவே பலரும் சடலத்துக்கு அருகில் கூடச் செல்ல விரும்பவில்லை. இறந்த முதியவர் அனாதையாக விடப்பட்டு அங்கு சுற்றித்திரிந்த பிச்சைக்காரர் என தெரியவந்தது. பின்னர் எஸ்.ஐ.ஸ்ரீசா, தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் முதியவர் உடலை இடு காட்டிற்கு எடுத்துச்சென்று இறுதி சடங்கு செய்ய முடிவு செய்தார். 

முதியவரின் உடலை எடுத்துச் செல்ல கிராம மக்களிடம் உதவி கோரினார். யாரும் உதவிக்கு வராத நிலையில், தொண்டு நிறுவனத்தை சேர்ந்த ஒருவரின் உதவியுடன், முதியவர் உடலை தனது தோளில் சுமந்து கொண்டு 2 கி.மீ. வரை தூக்கிச் சென்று தனது சொந்த பணத்திலிருந்து முதியவருக்கு இறுதி சடங்குகளை செய்தார். காவல்துறை பெண் அதிகாரியின் இந்த செயல், ஆந்திராவில் பெரும் பாராட்டைப் பெற்று வருகிறது. முதியவர் உடலை பெண் எஸ்.ஐ. , தனது தோளில் சுமந்து செல்லும்  வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இதுதொடர்பாக, ஆந்திரப் பிரதேச காவல்துறை தன் அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில், ஸ்ரீஷா முதியவரின் சடலத்தைச் சுமந்து சென்ற காணொளியைப் பதிவு செய்து வாழ்த்து தெரிவித்துள்ளது. 



Next Story