நீர்நிலைகளை சுத்தப்படுத்தவும், மழை நீரை சேகரிக்கவும் 100 நாள் இயக்கம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு


நீர்நிலைகளை சுத்தப்படுத்தவும், மழை நீரை சேகரிக்கவும் 100 நாள் இயக்கம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு
x
தினத்தந்தி 1 March 2021 1:25 AM GMT (Updated: 1 March 2021 1:25 AM GMT)

நீர்நிலைகளை சுத்தப்படுத்தவும், மழை நீரை சேகரிக்கவும் 100 நாள் இயக்கம் நடத்துமாறு நாட்டுமக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

புதுடெல்லி,

பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டு முதன்முதலாக பிரதமர் ஆன காலம்தொட்டு ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையிலும் அகில இந்திய வானொலியில் மன்கிபாத் என்னும் மனதின்குரல் நிகழ்ச்சிமூலம் நாட்டு மக்களிடம் பேசி வருகிறார்.

அந்த வகையில் நேற்று அவர் பேசும்போது கூறியதாவது:-

தண்ணீரைப் பொறுத்தமட்டில் நாம் கூட்டு பொறுப்பினை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் பெரும்பகுதிகளில் மே, ஜூன் மாதங்களில் மழை பெய்யத்தொடங்குகிறது.

நீர்நிலைகளை சுத்தம் செய்வதற்கும், மழை நீரை பாதுகாப்பதற்கும் 100 நாள் இயக்கத்தை இப்போதே தொடங்க முடியுமா?

இந்த சிந்தனையை மனதில் கொண்டு, இப்போதில் இருந்து சில நாட்களில் ‘ஜல்சக்தி அபியான் கேட்ச் தி ரெயின் திட்டம்’ ஜல்சக்தி அமைச்சகத்தால் தொடங்கப்படுகிறது.

இதன் நோக்கம், எங்கே எப்போது மழை பெய்கிறதோ அப்போது அதை பிடியுங்கள் என்பதுதான்.

இந்த பணியில் இப்போதே நாம் ஈடுபடுவோம் என உறுதி ஏற்போம். மழை நீர் சேகரிப்பு அமைப்புகளை பழுதுபார்ப்போம். கிராமங்களில் ஏரிகளையும், குளங்களையும் சுத்தம் செய்வோம். நீர்நிலைகளில் தண்ணீர் பாய்வதற்கு வழியில் தடையாக உள்ளவற்றை அகற்றுவோம். இப்படியாக, மழை நீரை அதிகபட்சமாக நாம் பாதுகாக்க முடியும்.

நாடு முழுவதும் நாம் இன்னும் அறிவியலை பிரபலப்படுத்த வேண்டும் என்ற தேவை எழுந்துள்ளது. இயற்பியல், வேதியியல், ஆய்வுக்கூடங்கள் என்ற அளவில் அறிவியல் சுருங்கிப்போய் விடக்கூடாது.

ஆய்வுக்கூடத்தில் இருந்து களம் வரையில் என்பதை மந்திரமாக கொண்டு அறிவியலை விரிவுபடுத்துவோம்.

நாட்டு மக்கள் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்கிறபோதும், ஒவ்வொருவரும் இணைக்கப்படுகிறபோதும், சுய சார்பு இந்தியா என்பது வெறுமனே பொருளாதார இயக்ககம் மட்டுமல்ல. இது தேசிய சக்தியாக உருவெடுக்கிறது.

நாம் தேஜாஸ் போர் விமானத்தை உள்நாட்டில் வடிவமைக்கிறோம். பீரங்கிகளையும் தயாரிக்கிறோம். இந்தியாவில் ஏவுகணைகளையும் தயாரிக்கிறோம். பணக்கார நாடுகளில் மெட்ரோ ரெயில்களில் இந்தியாவில் தயாரிக்கப்படுகிற பெட்டிகளை பார்க்கிறோம். இந்தியாவில் தயாரிக்கப்படுகிற கொரோனா தடுப்பூசி உலகின் பல டஜன் நாடுகளுக்கு போகிறது. அப்போதெல்லாம் நமது தலைகள் பெருமிதத்தால் நிமிர்கின்றன.

அதே நேரத்தில் பெரிய விஷயங்கள் மட்டுமே சுய சார்பு இந்தியாவை உருவாக்கும் என்று கருதக்கூடாது. இந்தியாவில் தயாரிக்கப்படுகிற ஜவுளிகள், இந்திய கைவினைஞர்களால் உருவாக்கப்படுகிற கைவினைப்பொருட்கள், மின்னணு பொருட்கள், செல்போன்கள் என ஒவ்வொரு துறையிலும் நாம் இந்த பெருமையை உயர்த்த வேண்டும்.

இந்த எண்ணத்துடன் நாம் முன்னோக்கி நடைபோடுகிறபோது, நாம் உண்மையாகவே சுயசார்பு அடைவோம். சுய சார்பு இந்தியா என்கிற மந்திரம் இந்தியாவின் கிராமங்களுக்கு சென்று அடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story