கர்நாடகாவில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை செலுத்த முடியாததால் தாலி சங்கிலியை கழற்றி கொடுத்த பெண்


கர்நாடகாவில் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை செலுத்த முடியாததால் தாலி சங்கிலியை கழற்றி கொடுத்த பெண்
x
தினத்தந்தி 2 March 2021 10:27 AM GMT (Updated: 2 March 2021 10:27 AM GMT)

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகையை செலுத்த முடியாததால் தனது தாலிசங்கிலியை கழற்றி போக்குவரத்து போலீசாரிடம் பெண் கொடுத்த வினோத சம்பவம் பெலகாவியில் அரங்கேறி உள்ளது.

போக்குவரத்து விதிமீறல்
கர்நாடகத்தில் சாலை விபத்துகளை தடுக்க மாநிலம் முழுவதும் போக்குவரத்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள். குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் மூலைமுடுக்கெல்லாம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

ஹெல்மெட் அணியாமல் செல்வது, போக்குவரத்து சிக்னலை மதிக்காமல் வாகனம் ஓட்டுவது உள்ளிட்ட போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளை பிடித்து போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்து வருகிறார்கள்.

ரூ.40 கோடி பாக்கி
குறைந்தபட்சம் அபராத தொகையாக ரூ.500-ஐ வாகன ஓட்டிகள் செலுத்த வேண்டி உள்ளது. அதிகபட்சமாக ரூ.5 ஆயிரம் வரை செலுத்தும் நிலைக்கும் வாகன ஓட்டிகள் தள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அபராதம் விதித்தும் பல வாகன ஓட்டிகள் அந்த அபராத தொகையை செலுத்தாமல் உள்ளனர்.இந்த வகையில் சுமார் 40 கோடி ரூபாய் வசூல் ஆகாமல் நிலுவையில் உள்ளது. இதனால் பெங்களூரு நகரில் வாகன ஓட்டிகள் போக்குவரத்து போலீசாரிடம் சிக்கி கொண்டால் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கிறார்கள்.

ஹெல்மெட் அணியவில்லை
இந்த நிலையில் அபராத தொகையை செலுத்த முடியாததால் தனது தாலி சங்கிலியை கழற்றி போக்குவரத்து போலீசாரிடம் ஒரு பெண் கொடுத்து சென்ற சம்பவம் கர்நாடகத்தில் அரங்கேறி உள்ளது.

அதுபற்றிய விவரம் வருமாறு:-
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் உக்கேரி தாலுகா உலோஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் பாரதி விபூதி (வயது 30). இவர் தனது கிராமத்தில் ஓட்டல் வைத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் தனது கணவருடன் பெலகாவி டவுனில் உள்ள சந்தைக்கு ஸ்கூட்டரில் காய்கறி வாங்க பாரதி சென்றார். பாரதியின் கணவர் ஹெல்மெட் அணிந்து இருந்தார். ஆனால் பாரதி ஹெல்மெட் அணிந்திருக்கவில்லை.

ரூ.500 அபராதம்
சோதனையில் ஈடுபட்டு இருந்த போக்குவரத்து போலீசார், ஸ்கூட்டரை மறித்தனர். மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்தது குறித்து பாரதியிடம் கேட்டனர். மேலும் ஹெல்மெட் அணியாமல் வந்ததற்காக ரூ.500-ஐ அபராதமாக விதித்தனர்.ஆனால் பாரதி தன்னிடம் ரூ.500 இல்லை என்று கூறினார். மேலும் தெரியாமல் ஹெல்மெட் அணியாமல் வந்து விட்டதாகவும், இந்த ஒரு முறை தங்களை விட்டுவிடும்படியும் பாரதியும், அவரது கணவரும் போக்குவரத்து போலீசாரிடம் மன்றாடி உள்ளனர்.

தாலியை கழற்றி கொடுத்தார்
ஆனாலும் அதனை ஏற்க மறுத்த போக்குவரத்து போலீசார் ரூ.500 அபராதம் செலுத்தினால் தான் விடுவோம் என்று பிடிவாதமாக கூறியுள்ளனர். இதனால் தான் கழுத்தில் அணிந்திருந்த தாலி சங்கிலியை பாரதி கழற்றி, போக்குவரத்து போலீசாரிடம் கொடுத்து உள்ளார். பின்னர் தாலி சங்கிலியை விற்று அபராத தொகையை எடுத்து கொள்ளும்படி கூறிவிட்டு பாரதி அங்கிருந்து சென்று விட்டார்.

இந்த காட்சிகளை அங்கு வேடிக்கை பார்த்து கொண்டு இருந்த சிலர் தங்களது செல்போன்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளனர். இந்த வீடியோவை பார்த்த பலரும் போக்குவரத்து போலீசாருக்கு எதிராக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

Next Story